புதுக்கோட்டை தொகுதியை மீட்க நோட்டாவுக்கு ஓட்டு மீண்டும் களமிறங்கும் தொகுதி மீட்பு குழு


புதுக்கோட்டை தொகுதியை மீட்க நோட்டாவுக்கு ஓட்டு மீண்டும் களமிறங்கும் தொகுதி மீட்பு குழு
x
தினத்தந்தி 22 March 2019 9:45 PM GMT (Updated: 22 March 2019 8:38 PM GMT)

புதுக்கோட்டை தொகுதியை மீட்க நோட்டாவுக்கே ஓட்டு என்ற கோஷத்துடன் மீண்டும் களம் இறங்கி உள்ளனர் தொகுதி மீட்பு குழுவினர். இதனால் அரசியல் கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை தொகுதியை மீட்க நோட்டாவுக்கே ஓட்டு என்ற கோஷத்துடன் மீண்டும் களம் இறங்கி உள்ளனர் தொகுதி மீட்பு குழுவினர். இதனால் அரசியல் கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர்.

தொகுதி மீட்பு குழு

1951 தொடங்கி 2009 வரை நாடாளுமன்ற தொகுதியாக இருந்த புதுக்கோட்டை தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் எம்.பி. தொகுதி அந்தஸ்தை இழந்தது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்த 6 சட்டமன்ற தொகுதிகளும் திருச்சி, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம் என 4 எம்.பி. தொகுதிகளுடன் சேர்க்கப்பட்டது.

எம்.பி. தொகுதியை மீட்க புதுக்கோட்டை மாவட்ட மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த பயனும் இல்லை. இதையொட்டி 2009-ம் ஆண்டு தேர்தலின்போது, புதுக்கோட்டை எம்.பி. தொகுதி மீட்பு குழு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 49 ஓ வுக்கு வாக்களிக்கும்படி பிரசாரம் செய்யப்பட்டது. (அப்போது வாக்குப்பதிவு எந்திரத்தில் நோட்டா சின்னம் இல்லை) இதில் 13 ஆயிரத்து 680 ஓட்டுகள் 49 ஓ வுக்கு கிடைத்தது.

50,932 ஓட்டுகள் நோட்டாவுக்கு...

அந்த தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட சாருபாலா தொண்டைமான் சுமார் 3 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதற்கு 49-ஓ ஓட்டு தான் காரணம் என கூறப்பட்டது.

இதேபோல் 2014-ம் ஆண்டு தேர்தலில் தொகுதி மீட்பு குழு சார்பில், நோட்டாவுக்கு ஓட்டு சேகரித்து தீவிர பிரசாரம் செய்யப்பட்டது. இதில் 50,932 ஓட்டுகள் நோட்டாவுக்கு கிடைத்தன.

தொகுதியை மீட்கும் முயற்சி

இந்நிலையில் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் களம் இறங்க புதுக்கோட்டை எம்.பி. தொகுதி மீட்பு குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து தொகுதி மீட்புக்குழுவை சேர்ந்த சந்திரசேகரன் கூறியதாவது:-

தனி நாடாளுமன்ற தொகுதிக்கான அனைத்து தகுதிகளும் புதுக்கோட்டைக்கு இருந்தும், தேர்தல் ஆணையத்தால் வஞ்சிக்கப்பட்டு விட்டோம் என்ற எண்ணம் இன்னும் புதுக்கோட்டை மக்களிடம் உள்ளது. 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது தான் ஒரு எம்.பி. தொகுதி. புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஆனால் எம்.பி. தொகுதி பறிபோய் விட்டது. இழந்த பெருமையை மீட்டெடுக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த தொகுதியை சார்ந்த ஒவ்வொரு வாக்காளர்களிடமும் உள்ளது. எனவே இந்த தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களித்து தொகுதியை மீட்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சர்ச்சை

மீண்டும் களம் இறங்கியுள்ள புதுக்கோட்டை எம்.பி. தொகுதி மீட்பு குழுவின் நடவடிக்கைகளால் மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சியினரிடையே கலகத்தை ஏற்படுத்தி உள்ளது. யாருடைய ஓட்டு நோட்டாவுக்கு விழப்போகிறது. இதனால் வெற்றி வாய்ப்பை தவற விடுவது யார்? யாருக்கு சாதகம் என பல விதமான கேள்விகள் பரபரப்பாக இப்போதே எழுந்திருக்கிறது.

Next Story