பல்வேறு துறைகளில் சாதித்த 20 பெண்களுக்கு சிறப்பு விருதுகள் ‘ரெயின்டிராப்ஸ்’ சமூக அமைப்பு வழங்கியது


பல்வேறு துறைகளில் சாதித்த 20 பெண்களுக்கு சிறப்பு விருதுகள் ‘ரெயின்டிராப்ஸ்’ சமூக அமைப்பு வழங்கியது
x
தினத்தந்தி 24 March 2019 4:30 AM IST (Updated: 24 March 2019 12:47 AM IST)
t-max-icont-min-icon

‘ரெயின்டிராப்ஸ்’ சமூக அமைப்பு சார்பில் சாதனை பெண்களுக்கான விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது.

சென்னை, 

‘ரெயின்டிராப்ஸ்’ சமூக அமைப்பு சார்பில் சாதனை பெண்களுக்கான விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் 20 பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது.

‘ரெயின்டிராப்ஸ்’

பெண் சாதனையாளர்களை கவுரவிக்கும் வகையில் ‘ரெயின்டிராப்ஸ்’ சமூக அமைப்பு கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சாதனை பெண்கள் விருது வழங்கும் விழாவை நடத்தி வருகிறது.

அந்த வகையில் 7-ம் ஆண்டாக, ‘ரெயின்டிராப்ஸ்’ சமூக அமைப்பு, சத்யபாமா பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீதங்கம் ஜூவல்லரி ஆகியவற்றுடன் இணைந்து சாதனை பெண்கள் விருது விழாவை சென்னை அண்ணாசாலையில் உள்ள ராணி சீதை அரங்கத்தில் நேற்று நடத்தியது. விழாவுக்கு ரெயின்டிராப்ஸ் அமைப்பின் நிறுவனர் அரவிந்தன் தலைமை தாங்கினார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது

இதில் ரெயின்டிராப்ஸ் வாழ்நாள் சாதனையாளர் விருது புகழ்பெற்ற மூத்த பரத நாட்டிய கலைஞர் பத்மபூஷன் சாந்தா தனஞ்செயனுக்கும், பெண் சாதனையாளர் விருது கேரளாவை சேர்ந்த இந்தியாவின் முதல் பெண் ஆழ்கடல் மீனவர் ரேகா கார்த்திகேயனுக்கும், சிறந்த இரும்பு பெண்மணிக்கான விருதை ரூபி பியூட்டிக்கும் வழங்கப்பட்டது.

இதேபோல், இயற்கை விவசாயி சித்தம்மா, மருத்துவ சேவையாற்றும் சாந்தி அருணாச்சலம், சாரங்கி இசை கலைஞர் மனோன்மணி, சிலம்பம் சாம்பியன் ஐஸ்வர்யா மணிவண்ணன், 84 வயதான தடகள வீராங்கனை டெய்சி விக்டர், பெண்களுக்கான குறைந்த விலை இயற்கை நாப்கின்களை உருவாக்கிய அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவி பிரீத்தி ராமதாஸ், வேல்டெக் பல்கலைக்கழக நிறுவன தலைவர் சகுந்தலா ரெங்கராஜன் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

வி.ஜி.சந்தோசம்

மேலும் தமிழ்மொழி மற்றும் கலாசாரத்தினை பரப்பி, பபுவா நியூ கினியா நாட்டில் சிறந்த முறையில் செயலாற்றி வரும் சுபா அபர்ணா சசிதரன், தூய்மை இந்தியா திட்டத்தின் முதல் திருநங்கை தூதுவர் கோவையை சேர்ந்த தஸ்லிமா நஸ்ரின், அண்ணா உயிரியல் பூங்காவின் காட்டு விலங்குகள் பாதுகாப்பாளர்கள் நாகம்மாள், தேவகி, துளசி, ராதா, பின்னணி பாடகர் தீ மற்றும் சிறப்பு அங்கீகாரத்தை மாற்றுத்திறனாளி இசை கலைஞர் சஹானா என மொத்தம் 20 பெண்களுக்கு சாதனை விருதுகள் வழங்கப்பட்டன.

விருதுகளை சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் மரியஸீனா ஜான்சன், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், நடன இயக்குனர் கலா உள்பட பலர் வழங்கினார்கள்.

இந்த விழாவில் விருது பெற்றவர்களை தவிர, சிறந்த ஆளுமைக்கான விருதுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவும், சமூகத்துக்கு வெற்றிகரமான செயல்திட்டங்களை உருவாக்கியதற்காக டாக்டர் திவ்யா சத்யராஜூம் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கான விருதுகள் நேரடியாக சென்று வழங்கப்பட உள்ளன.

Next Story