“என்னை ஒரு நல்ல அரசியல்வாதி என கூறும் நாள் வரும்” -கமல்ஹாசன் பேச்சு
என்னை ஒரு நல்ல அரசியல்வாதி என கூறும் நாள் வரும் என்று வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார்.
சென்னை,
கோவையில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கமல் பேசியதாவது:-
நடிகர் தானே என்று எதிர்க்கட்சி தலைவர் கேட்கிறார், நான் நேர்மையான நடிகன், வருமான வரியை பாக்கி இல்லாமல் கட்டுபவன். என்னை ஒரு நல்ல அரசியல்வாதி என கூறும் நாள் வரும். 5 ஆயிரம் மதுக்கடைகளை மூடுவதாக கூறியது என்ன ஆனது? கஜா, ஒகி புயல் பாதிப்பின் போது தமிழகம் வராத பிரதமர் மோடி தேர்தலுக்காக 4 முறை தமிழகம் வருகிறார்.
மக்கள் நீதி மய்யம் வெற்றி பெறும் ஒவ்வொரு தொகுதியிலும், தண்ணீர் பிரச்சனை போர்க்கால அடிப்படையில் சரிசெய்யப்படும், மரங்கள் வளர்க்கப்பட்டு பசுமை தொகுதியாக மாற்றப்படும்.
ஏரி, குளங்கள் பாதுகாக்கப்படும், குறைந்த அளவு தண்ணீரில் விவசாயம் செய்யும் ஜப்பான் தொழில் நுட்பம் அறிமுகம் செய்யப்படும்.
ஏழைகளை உள்ளே வராமல் தடுத்து பணக்காரர்களை காக்கும் காவலாளிதான் மோடி. நம்மை தெருவுக்கு கொண்டு வந்ததுதான் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்தவர்களின் சாதனை.
மக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள் என நினைத்து செய்ய முடியாத வாக்குறுதிகளையும் அள்ளி வீசுகிறார்கள். மக்கள் நீதி மய்யம் ஆட்சி மக்களின் ஆட்சியாக இருக்கும்; எம்பிக்கள் தவறு செய்தால் கட்சி அலுவலகத்தில் இருந்து ராஜினாமா கடிதம் வரும்.
மக்களவை தேர்தலில் பணப்பட்டுவாடாவை தாண்டி மக்கள் நீதி மய்யம் வெல்லப் போகிறது. 5 ஆண்டுகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டு விலைக்கு வாங்கப்படுகிறது தடுக்கப்படும். குடிசைகள் இல்லா தமிழகம் காண்போம்; விவசாயம், தொழில்துறைக்கு திட்டங்கள் வகுக்கப்படும். விவசாயம் உட்பட அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு ஊதியம். மக்கள் நீதி மய்யம் வெற்றி பெறும் ஒவ்வொரு தொகுதியும் நீர் மேலாண்மையில் முக்கியத்துவம் பெறும். தண்ணீர் பிரச்னை போர்க்கால அடிப்படையில் சரி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
சிவகங்கை மக்களவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சிநேகன் போட்டியிடுகிறார். கோவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் துணை தலைவர் மகேந்திரன் போட்டியிடுகிறார். காஞ்சிபுரம் - எம்.தங்கராஜ், தி.மலை - அருள், ஆரணி - வி.ஷாஜி, கள்ளக்குறிச்சி - கணேஷ், தென்சென்னை - ரங்கராஜன், மதுரை - அழகர், தஞ்சை - ஆர்.எஸ்.சம்பத் ராமதாஸ், கடலூர் - அண்ணாமலை, தென்காசி - முனீஸ்வரன், திருப்பூர் - சந்திரகுமார், பெரம்பலூர் - அருள்பிரகாசம், நாமக்கல் - ஆர்.தங்கவேலு, ஈரோடு - சரவணக்குமார், ராமநாதபுரம் - விஜயபாஸ்கர், கரூர் - ஹரிஹரன் போட்டியிடுகின்றனர்.
மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடவில்லை.
Related Tags :
Next Story