‘தமிழகத்தில் எதிர்க்க வேண்டிய திட்டங்களை அ.தி.மு.க. எதிர்க்கும்’ தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு


‘தமிழகத்தில் எதிர்க்க வேண்டிய திட்டங்களை அ.தி.மு.க. எதிர்க்கும்’ தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 25 March 2019 12:00 AM GMT (Updated: 24 March 2019 6:57 PM GMT)

அ.தி.மு.க. கொள்கையை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்றும், தமிழகத்தில் எதிர்க்க வேண்டிய திட்டங்களை எதிர்க்கும் என்றும் தேர்தல் பிரசாரத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

வேலூர், 

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று 3-வது நாளாக, வேலூர் தொகுதி புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், அரக்கோணம் தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி, சோளிங்கர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சம்பத் ஆகியோரை ஆதரித்து சத்துவாச்சாரி, ஆற்காடு பஸ் நிலையம், முத்துக்கடை, சோளிங்கர், பானாவரம் கூட்ரோடு ஆகிய இடங்களில் வேனில் இருந்தபடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

ஆதரவு - எதிர்ப்பு

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மக்கள் நலன் சார்ந்த கூட்டணி. இந்த கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும். நான் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பொதுமக்களை சந்தித்து வாக்கு கேட்டு வருகிறேன்.

செல்லுமிடம் எல்லாம் பொதுமக்கள் அமோக ஆதரவு அளித்து எங்களை வரவேற்கிறார்கள். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை உண்டு அ.தி.மு.க.வை பொறுத்தவரை ஆதரிக்க வேண்டிய திட்டங்களை ஆதரிக்கும், எதிர்க்க வேண்டிய திட்டங்களை எதிர்த்து குரல் கொடுக்கும். கொள்கையை ஒருபோதும் அ.தி.மு.க. விட்டுக்கொடுக்காது. தி.மு.க. அரசு வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை உண்மைக்கு மாறான அறிக்கை. இவர்கள் அறிவித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாது. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஊழல் என்று சொல்லி வருகிறார்.

போராட்டங்களை முறியடிக்கும் சக்தி

இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரு ஆட்சி தி.மு.க. என்பதை அவர் மறந்துவிட்டு பேசுகிறார். அவர் தேடித்தேடி பார்க்கிறார். எங்கேயும் எந்த குற்றமும் கண்டுபிடிக்க முடியவில்லை. அ.தி.மு.க.வை உடைக்கவும், ஆட்சியை கலைக்கவும் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தார். எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை. தி.மு.க. எவ்வளவோ போராட்டங்களை நடத்தினாலும் அனைத்து போராட்டங்களிலும் வெற்றி காணும் வகையில் போராடுபவர்களை அழைத்து அவர்களிடத்தில் சமாதானமாக பேசி, போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வந்த அரசு, அ.தி.மு.க. அரசு. தி.மு.க. தூண்டுதலின் பேரில் எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும், அத்தனை போராட்டங்களையும் முறியடிக்கின்ற சக்தியும், ஆற்றலும், இந்த அரசுக்கு உண்டு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தை கண்டுபிடித்தது இந்த அரசு தான். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்கிறார்கள். அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் கொடுத்து அவர்களை வெளியில் கொண்டுவருபவர்கள் தி.மு.க.வைச் சார்ந்தவர்கள். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பார்களோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. சந்தேகங்களை தீர்த்துவைப்பது அரசினுடைய கடமை. எனவே, யார் தவறு செய்திருந்தாலும், தப்பிக்க முடியாது. அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

மக்கள் செல்வாக்கு

தி.மு.க. கூட்டணியில் தற்போது சேர்ந்துள்ள வைகோ என் உயிர் உள்ளவரை, ஸ்டாலினை முதல்-அமைச்சராக வர விடமாட்டேன் என்றும், தி.மு.க. குடும்ப ஆதிக்க கட்சி என்றும் கூறினார். ஆனால் இன்று அவரை, தங்கள் கூட்டணியில் சேர்த்தது எப்படி, இதையெல்லாம் நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். கடவுள் இல்லை என்று வெளித்தோற்றத்தில் கூறிக்கொள்ளும் ஸ்டாலின், தங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வது அவருக்கு தெரியாதா? ஏன் இந்த இரட்டை வேடம் போடுகிறார்.

“கரும்பு தேய்ந்து கட்டெறும்பான கதையாக” கட்சி தொடங்கி மக்களின் ஆதரவைப் பெறாமல், சிறிது சிறிதாக மக்கள் செல்வாக்கை இழந்துள்ள கட்சிகளோடு ஸ்டாலின் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறார். இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

தொண்டனாக இருக்கிறேன்

அ.தி.மு.க. ஆட்சியில் சாதி கலவரம் இல்லை, மதக்கலவரம் இல்லை, மிகவும் அமைதியான முறையில் மக்கள் அனைத்து நலன்களையும் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் இந்த அரசு அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்து அவர்களின் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றி வருகிறது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகச்சிறப்பாக இருக்கிறது. சட்டம்-ஒழுங்கு மிகச்சிறப்பாக செயல்படுவதற்கு இந்தியாவில் இருக்கின்ற காவல் நிலையங்களில் கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் முதலிடத்தையும், அண்ணா நகர் காவல் நிலையம் 5-வது இடத்தையும், பெரியகுளம் காவல் நிலையம் 8-வது இடத்தையும் பெற்றிருப்பதே சாட்சி ஆகும்.

ஸ்டாலின் தனது நேற்றைய தேர்தல் பிரசாரத்திலே என்னை கடவுள் என்று கூறியிருக்கிறார். நான் ஒரு சாதாரண விவசாயி. “அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்” என்பது போல ஸ்டாலினுக்கு வேண்டுமானால் அப்படி தெரியும். நான் என்றுமே என்னை ஒரு முதல்-அமைச்சராக நினைத்தது இல்லை. நான் தொண்டனாக இருக்கிறேன். ஆனால் ஸ்டாலினோ தலைவனாக இருந்து பார்க்கிறார். மக்கள் கொடுக்கின்ற அன்பு தான், எனக்கு பரிசு.

சாதாரண தொண்டன்

நான் 1974-ம் ஆண்டு அ.தி.மு.க. கிளை கழக செயலாளராக என்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடங்கி இன்று படிப்படியாக பல்வேறு பொறுப்புகளைப் பெற்று உயர்ந்து முதல்-அமைச்சராக இருக்கின்றேன். ஆனால், ஸ்டாலின் அப்படி அல்ல, அவரது தந்தை தி.மு.க. தலைவராக இருந்தார். அவர் மறைவுக்கு பின்பு அவரே தலைவராகிவிட்டார். அ.தி.மு.க.வில் மட்டும் தான் சாதாரண தொண்டன் கூட உயர்ந்த பொறுப்புக்கு வர முடியும் என்பதற்கு நானே உதாரணமாக இருக்கிறேன்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தனது நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு தொகுதிக்கு 100 பேர் என 600 ஏழை, எளிய மாணவர்களுக்கு தனது கல்வி நிறுவனத்தின் மூலம் இலவசமாக கல்வி வழங்குவதாகவும், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுகின்ற வகையில் ஒரு திருமண மண்டபம் கட்டித்தரப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார். இதுபோன்ற மக்கள் நலன் சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் வேட்பாளர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

எனவே, வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் புதிய நீதிக்கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்துக்கு இரட்டை இலை சின்னத்திலும், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் பா.ம.க.வின் வேட்பாளராக போட்டியிடும் ஏ.கே.மூர்த்திக்கு மாம்பழம் சின்னத்திலும், சோளிங்கர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சம்பத்துக்கு இரட்டை இலை சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தொண்டை கட்டியது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆற்காடு பஸ் நிலையத்தில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

அவர் பேசத்தொடங்கியபோது அவரால் சரியாக பேசமுடியவில்லை. உடனே எதிர்க்கட்சியை திட்டி திட்டியே எனது தொண்டை அடைத்துக்கொண்டது. அந்த அளவுக்கு அவர்கள் அராஜகம் செய்துள்ளார்கள். அவர்களுடைய அராஜகத்தை எடுத்துக்கூறியே எனக்கு தொண்டை அடைத்துக்கொண்டது என்று கூறினார்.

Next Story