திருவள்ளூர் தொகுதி வேட்பாளரை மாற்றக்கோரி கே.எஸ்.அழகிரி காரை வழிமறித்து காங்கிரசார் போராட்டம்


திருவள்ளூர் தொகுதி வேட்பாளரை மாற்றக்கோரி கே.எஸ்.அழகிரி காரை வழிமறித்து காங்கிரசார் போராட்டம்
x
தினத்தந்தி 25 March 2019 2:45 AM IST (Updated: 25 March 2019 12:33 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை மாற்றக் கோரி சென்னை சத்தியமூர்த்திபவனில் கே.எஸ்.அழகிரி காரை வழிமறித்து காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

சென்னை, 

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு திருவள்ளூர்(தனி), கிருஷ்ணகிரி, ஆரணி, திருச்சி, கரூர், தேனி, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில் சிவகங்கை தொகுதியை தவிர்த்து மற்ற 9 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் அகில இந்திய தலைமை கடந்த 22-ந்தேதி நள்ளிரவு வெளியிட்டது.

சிவகங்கை தொகுதியில் போட்டியிட ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், முன்னாள் மத்திய மந்திரி சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் 2 பேரும் போட்டி போட்டதால், அந்த தொகுதியை யாருக்கு ஒதுக்குவது என்பதில் இழுபறி இருந்தது. இந்தநிலையில் கார்த்தி சிதம்பரத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உள்கட்சியில் புகைச்சல்

காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் பலரும் தேர்தலில் போட்டியிட கங்கணம் கட்டி இருந்தனர். தற்போது வாய்ப்பு கிடைக்காத நிர்வாகிகள் சிலர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் உள்கட்சியில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர்(தனி) தொகுதிக்கு போட்டா போட்டி நிலவியது. அந்த தொகுதியை காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் கே.ஜெயக்குமார், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், எஸ்.சி. பிரிவு தலைவர் செல்வபெருந்தகை உள்பட 64 நிர்வாகிகள் குறி வைத்திருந்தனர். இதில் வேட்பாளராக கே.ஜெயக்குமார் தேர்வு செய்யப்பட்டார்.

ஜெயக்குமாரின் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் ஆகும். அவரை திருவள்ளூர் தொகுதியில் களம் இறங்கியதற்கு காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு நிர்வாகிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

கே.எஸ்.அழகிரியிடம் முறையீடு

அதன்படி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை, சென்னை சத்தியமூர்த்திபவனில் எஸ்.சி. பிரிவு பொறுப்பாளர் தாஸ் பாண்டியன் தலைமையில் மாவட்ட தலைவர்கள் புத்தநேசன், அய்யப்பன், சவுந்தர் உள்பட நிர்வாகிகள் நேற்று சந்தித்து முறையிட்டனர். திருவள்ளூர் தொகுதியில் செல்வபெருந்தகை அல்லது எஸ்.சி.பிரிவை சேர்ந்த யாரையாவது வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அப்போது அவர்களிடம், ‘டெல்லிக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் செல்வபெருந்தகை பெயரும் இடம் பெற்றிருந்தது. எனினும் வேட்பாளரை தேர்வு செய்தது அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை தான்.’ என்று கே.எஸ்.அழகிரி விளக்கம் அளித்தார்.

ஆனால் அவருடைய விளக்கத்தை எஸ்.சி. பிரிவு நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. திருவள்ளூர் தொகுதியில் வேட்பாளரை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி சத்தியமூர்த்திபவன் நுழைவுவாயில் முன்பு திடீரென்று தர்ணா போராட்டத்தில் குதித்தனர்.

தீக்குளிக்க முயற்சி

இந்தநிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சத்தியமூர்த்திபவனில் இருந்து வெளியே புறப்பட தயாரானார். அப்போது கே.எஸ்.அழகிரி காரை வழிமறித்து 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சிலர் அவரது காரை முற்றுகையிட்டு, வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று கோஷம் எழுப்பியதால் அங்கு பதற்றமான சூழல் உருவானது.

இதையடுத்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், எஸ்.சி.பிரிவு ஒருங்கிணைப்பாளர் பி.வி.தமிழ்செல்வன் உள்பட நிர்வாகிகள், அவர்களை சமாதானம் செய்தனர். பின்னர் அவர்கள் கே.எஸ்.அழகிரி காருக்கு வழிவிட்டனர்.

கே.எஸ்.அழகிரி புறப்பட்டு சென்ற பின்னரும் சத்தியமூர்த்திபவனில் தர்ணா போராட்டம் தொடர்ந்தது.

போராட்டம் தொடரும்

போராட்டம் குறித்து எஸ்.சி. பிரிவு பொறுப்பாளர் தாஸ் பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. கூட்டணியில் தென்காசி, திருவள்ளூர் ஆகிய 2 தனித்தொகுதிகள் நாங்கள் கேட்டு இருந்தோம். ஆனால் திருவள்ளூர் தொகுதி மட்டும் கிடைத்தது. அந்த தொகுதியிலும் எஸ்.சி. பிரிவு நிர்வாகிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது சமூக நீதிக்கு எதிரான செயல் ஆகும். எனவே திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட எஸ்.சி. பிரிவு தலைவர் செல்வபெருந்தகை அல்லது நிர்வாகிகள் யாருக்காவது வாய்ப்பு அளிக்க வேண்டும். திருவள்ளூர் தொகுதி வேட்பாளரை மாற்றும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சட்டமன்ற தேர்தலை போன்றே...

கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட செல்வபெருந்தகைக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா சத்தியமூர்த்திபவனில் தர்ணா போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் பிரச்சினைக்குள்ளாகி உள்ளது.

Next Story