நாடாளுமன்ற தேர்தல், 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முடிகிறது தி.மு.க. வேட்பாளர்கள் இன்று மனுதாக்கல் செய்கிறார்கள்


நாடாளுமன்ற தேர்தல், 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முடிகிறது தி.மு.க. வேட்பாளர்கள் இன்று மனுதாக்கல் செய்கிறார்கள்
x
தினத்தந்தி 25 March 2019 12:15 AM GMT (Updated: 24 March 2019 7:12 PM GMT)

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. தி.மு.க. வேட்பாளர்கள் இன்று மனுதாக்கல் செய்கிறார்கள்.

சென்னை, 

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

18-ந் தேதி தேர்தல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. தமிழகத்தின் பிரதான கட்சியான அ.தி.மு.க. மற்றும் அந்த கட்சியின் கூட்டணி கட்சி களான பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. வேட்பாளர்களில் பலரும், தி.மு.க. மற்றும் அந்த கட்சியின் கூட்டணி கட்சி வேட்பாளர்களில் சிலரும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.

இதுவரை 179 பேர்

வேட்புமனு தாக்கல் தொடங்கிய 4 நாட்களில் மட்டும் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 179 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். இதில் 29 பேர் பெண்கள் ஆவர். மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட பாரதி கண்ணம்மா என்ற திருநங்கையும் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்.

இதேபோன்று 18 சட்டசபை தொகுதிகளுக்கு 68 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். இவர்களில் 18 பேர் பெண்கள் ஆவர்.

பெரும்பாலானோர் இன்று மனு தாக்கல்

சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்பதால் மீண்டும் இன்று (திங்கட் கிழமை) வேட்புமனுக்கள் பெறப்படுகின்றன.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நாளை (செவ்வாய்க் கிழமை) கடைசி நாள் ஆகும். செவ்வாய்க்கிழமை எந்த நல்ல காரியத்தையும் முன்னெடுப்பது இல்லை என்ற பொதுவான கருத்து இருப்பதால் வேட்பாளர்களில் பெரும்பாலானோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது.

தி.மு.க. வேட்பாளர்கள்

மீதம் உள்ள தி.மு.க. வேட்பாளர்கள் இன்று காலை தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்கிறார்கள்.

தலைநகர் சென்னையை பொறுத்தவரை, இங்குள்ள 3 தொகுதிகளிலும் தி.மு.க.வே போட்டியிடுகிறது. வடசென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீரசாமி, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள மாநகராட்சி வடக்கு வட்டார துணை கமிஷனர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

மத்திய சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன், செனாய்நகரில் உள்ள மாநகராட்சி மத்திய வட்டார துணை கமிஷனர் அலுவலகத்திலும், தென்சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் சுமதி என்ற தமிழச்சி தங்கபாண்டியன், அடையாறில் உள்ள மாநகராட்சி தெற்கு வட்டார துணை கமிஷனர் அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள்.

முக்கிய பிரமுகர்கள்

கடந்த வெள்ளிக்கிழமை இரவு தான் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதால் அவர்களும் இன்று வேட்புமனுக்களை அளிக்கின்றனர். முக்கிய பிரமுகர்களான கனிமொழி, தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், எச்.வசந்தகுமார், தொல்.திருமாவளவன் உள்ளிட்டோரும் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்கின்றனர்.

இதேபோன்று சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பலரும் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர். அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்தவர்களும் நாளைக்குள் மனு தாக்கல் செய்ய முடிவு செய்து உள்ளனர்.

பரிசீலனை

27-ந் தேதி (புதன்கிழமை) வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். அப்போது வேட்பாளர்கள் தாக்கல் செய்த ஆவணங்கள் சரியானது தானா? என்பது குறித்து பரிசீலிக்கப்படும். 29-ந் தேதி மாலை 3 மணி வரை வேட்பு மனுவை வாபஸ் பெறலாம். அன்று மாலை தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

Next Story