தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல்


தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 24 March 2019 11:15 PM GMT (Updated: 24 March 2019 7:15 PM GMT)

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கிவிட்டது போன்ற சூழ்நிலையே கடந்த 3 வாரங்களுக்கு மேலாக நிலவி வருகிறது.

சென்னை, 

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கிவிட்டது போன்ற சூழ்நிலையே கடந்த 3 வாரங்களுக்கு மேலாக நிலவி வருகிறது. பொதுவாக ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த மாதம் தொடங்கியதில் இருந்தே தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.

அவ்வப்போது இயல்பைவிட வெப்பம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் அடுத்த 4 நாட்களுக்கும் வெயில் சுட்டெரிக்கும் என்றும், இயல்பை விட வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

கிழக்கில் இருந்து காற்று வீசும்போது தமிழகத்தில் பரவலாக வெப்பத்தின் தாக்கம் தெரியாது. ஆனால் தற்போது தெற்கில் இருந்து காற்று வீசுவதாலும், அந்த காற்று நிலப்பரப்புக்கு வராததாலும் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்.

இதனால் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதன்பிறகு, ஏற்படும் காலநிலையை பொறுத்தே வெப்பத்தின் தாக்கம் குறையுமா? அதிகரிக்குமா? என்பது தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story