பணம் பறிப்பது மோசடி என்றால், வாக்குகளை பறிப்பது மோடித்தனம் மு.க.ஸ்டாலின் பேச்சு


பணம் பறிப்பது மோசடி என்றால், வாக்குகளை பறிப்பது மோடித்தனம்  மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 24 March 2019 10:45 PM GMT (Updated: 24 March 2019 7:25 PM GMT)

பணம் பறிப்பது மோசடி என்றால், வாக்குகளை பறிப்பது மோடித்தனம் என்று சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை, 

வட சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி, எம்.கே.பி.நகரில் தி.மு.க. பிரசார பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் தலைமை தாங்கினார். பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், வட சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் டாக்டர் கலாநிதி வீராசாமி, பெரம்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஆர்.டி.சேகர் ஆகியோரை ஆதரித்து பேசியதாவது:-

தேர்தல் நடந்து முடிந்து, அதற்கு பிறகு நடக்கும் வெற்றி விழா கூட்டம் போல இந்த கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு ஒட்டுமொத்த சென்னையும் இங்கே திரண்டு வந்திருக்கிறது. 19-ந் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கினேன். கருணாநிதியை ஈன்ற மண் என்பதாலும், கருணாநிதியை 2 முறை தேர்ந்தெடுத்த தொகுதி என்பதாலும் அந்த தொகுதியில் நான் முதலில் பிரசாரத்தை தொடங்கினேன்.

வெற்றி உறுதி

விரைவில் அடையப்போகும் வெற்றிக்கு அடையாள சின்னமாக இந்த கூட்டம் அமைந்துள்ளது. தேர்தலே நடக்காமல், வாக்குபதிவே நடக்காமல், வாக்கு எண்ணிக்கையே நடக்காமல் நமது வெற்றி உறுதியாகி உள்ளது. நான் மக்கள் முகத்தை பார்க்கிறேன். உங்கள் முகத்தில் அந்த உணர்ச்சியை, எழுச்சியை பார்க்கிறேன். அந்த நிலையில் தான் இதை உறுதியோடு தெரிவிக்கிறேன். நாடும் நமதே, நாற்பதும் நமதே என்ற முழக்கத்தை அடிப்படையாக வைத்து தேர்தல் களத்தில் இறங்கியிருக்கிறோம். நம் கையில் மாநில அரசு, நாம் கையை காட்டுவதே மத்திய அரசு.

கருணாநிதியே நேரடியாக வந்து உங்களிடம் வாக்கு கேட்டு இருக்கிறார். இன்றைக்கு அவர் வரவில்லை. இருந்தாலும் அவர் மகனாக இருக்கக்கூடிய மு.க.ஸ்டாலின் வந்திருக்கிறேன். தொண்டர்களில் ஒருவனாக இருக்கக்கூடிய ஒருவனாக வந்திருக்கிறேன். நீங்கள் மிகப்பெரிய வெற்றியை தி.மு.க. கூட்டணிக்கு தேடித்தர வேண்டும்.

ரத்த பரிசோதனை செய்யாதீர்கள்

கருணாநிதியின் எண்ணத்தை ஆற்காடு வீராசாமி பிரதிபலிப்பார். அவரின் மகன் கலாநிதி கட்சிக்காக பல பணிகளை ஆற்றியிருக்கிறார். வாரிசுகளுக்கு வழங்கலாமா? என்று கேட்கிறார்கள். வாரிசு என்ற காரணத்திற்காக திறமைசாலிகளை விட்டு விடலாமா? வேட்பாளர்கள் தகுதி வாய்ந்தவர்களா இல்லையா? என்பதை பாருங்கள், அவர்களை ரத்த பரிசோதனை செய்யாதீர்கள்.

எத்தனை நகரத்தை சுற்றினாலும், சென்னை மீது எனக்கு தனி ஆர்வம் உண்டு. சென்னை மாநகராட்சி மேயராக இருந்து இருக்கிறேன். மேயர் பொறுப்பு ஏற்ற நேரத்தில், அதை பதவியாக கருத கூடாது, பொறுப்பாக கருத வேண்டும் என்று கருணாநிதி கூறினார். அந்த வகையில் தான் எங்கள் பணி இருந்தது. மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியை திட்டமிட்டு சிறப்பாக அமைத்தோம், போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலங்கள் கட்டினோம்.

வித்தியாசம்

அண்ணா மேம்பாலம் தொடர்பாக கருணாநிதி மீது பொய் வழக்கு புனைந்து நடு இரவில் கைது செய்தார்கள். பாலத்தை உடைத்து பார்த்தார்கள். ஒன்றும் கிடைக்கவில்லை. தரமாக மேம்பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. நிர்வாகம், பொறுப்பு எல்லாவற்றையும் மேயராக இருந்தபோதுதான் நான் அறிந்துகொண்டேன். அதுதான் எனக்கு பயிற்சி.

கஜா புயல் பாதித்தபோது, உடனடியாக முதல்-அமைச்சர் நேரடியாக போய் பார்த்தாரா?. ஆனால் தி.மு.க. ஆட்சியில் மக்கள் பாதிக்கப்பட்டபோது கருணாநிதி நேரடியாக போய் பார்த்தார். அதுதான் அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் உள்ள வித்தியாசம். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை வாங்கி கொடுத்தவர் கருணாநிதி. ஆனால் இன்றைக்கு என்ன நிலை?. இந்திக்கும், சமஸ்கிருதத்திற்கும் வால் பிடிக்கும் நிலை உள்ளது.

வீட்டு விளக்கு

தி.மு.க. ஆட்சியில் 7 ஆயிரம் கோடி விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. அ.தி.மு.க.வினர் தான் அதிகமாக கடன் வாங்கியிருந்தார்கள். அ.தி.மு.க., தி.மு.க. என்று பார்க்காமல் அனைவரின் கடன்களையும் கருணாநிதி தள்ளுபடி செய்தார். ஆனால் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். அவர்களால் மோடியை சந்திக்க முடிந்ததா?.

தி.மு.க. வீட்டு விளக்கு, அ.தி.மு.க. வீட்டை, நாட்டை கொளுத்தும் விளக்கு. நாட்டை எரிக்கும் அந்த விளக்குக்கு டெல்லியில் இருந்து மோடி எண்ணெய் ஊற்றிக்கொண்டு இருக்கிறார்.

சுயநினைவு இல்லை

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளர் மனுவில் ஜெயலலிதாவின் சுய நினைவு இல்லாமல் தான் கைரேகை பெறப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார்கள். இதில் இருந்து என்ன தெரிகிறது, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடந்தபோதே ஜெயலலிதா உயிரோடு இருந்தாரா? இல்லையா? என்பது தெரியவில்லை.

ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவர் உடல்நிலை குறித்த செய்திகள் முறையாக வந்ததா? அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோர் முதல்-அமைச்சர்களாக இருந்தபோது தான் மறைந்தார்கள். அவர்கள் ஆஸ்பத்திரியில் இருந்தபோது, மருத்துவ அறிக்கை வெளியாகியதே. ஆனால் ஜெயலலிதா விஷயத்தில் அப்படி எதுவும் வரவில்லை. எதுமே தெரியாதவர்கள் இட்லி சாப்பிட்டார்கள் என்று தெரிவித்தார்கள்.

மோடித்தனம்

விரைவில் ஆட்சி மாற்றம் வரும்போது, மக்கள் திட்டங்களை தீட்டப்போகிறோம், பிரச்சினைகளை தீர்க்கப்போகிறோம். அதற்கு முன்னால், முதல் வேலையாக ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களுக்கு, தண்டனையை இந்த மு.க.ஸ்டாலின் பெற்றுத்தருவான். அ.தி.மு.க.வின் உண்மை தொண்டர்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள். ஜெயலலிதாவுக்கும், நமக்கும் அரசியலில் கருத்து வேறுபாடுகள், கொள்கை அடிப்படையில் இருந்தாலும், இறந்தது முதல்-அமைச்சர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், மோடியும் பொய் சொல்வதில் கெட்டிக்காரர்கள். தேர்தல் வந்து விட்டதால் பொய் பரப்புரையை மேற்கொண்டு இருக்கிறார்கள். பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே... பணம் பறித்தது மோசடி தனம் என்றால், வாக்குகளை பறிப்பது மோடித்தனம். மோசடி தனத்திற்கு தண்டனை உண்டு. மோடித்தனத்திற்கு தண்டனை தர சட்டம் இருக்கு. மோடித்தனத்திற்கு தண்டனை நீங்கள் தர வேண்டும். தருவீர்களா...? மோடித்தனத்திற்கு தண்டனை தர நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?.

இவ்வாறு அவர் பேசினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story