அ.தி.மு.க. கூடுதல் தேர்தல் அறிக்கை வெளியீடு ராஜபக்சேவை சந்தித்து பரிசுப்பொருள் பெற்ற கனிமொழி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்


அ.தி.மு.க. கூடுதல் தேர்தல் அறிக்கை வெளியீடு ராஜபக்சேவை சந்தித்து பரிசுப்பொருள் பெற்ற கனிமொழி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்
x
தினத்தந்தி 24 March 2019 10:30 PM GMT (Updated: 24 March 2019 7:35 PM GMT)

அ.தி.மு.க.வின் கூடுதல் தேர்தல் அறிக்கையில், ‘ராஜபக்சேவை சந்தித்து பரிசுப் பொருட்களைப் பெற்றுவந்த கனிமொழி தலைமையிலான குழுவினர் மீது இந்திய அரசாங்கம் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க அ.தி.மு.க. வலியுறுத்தும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. தற்போது அதில் மாற்றம் செய்து, கூடுதல் தேர்தல் அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அ.தி.மு.க. வெளியிட்டுள்ள கூடுதல் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

* இலங்கையில் நடைபெற்ற ஈழத்தமிழின படுகொலைகளுக்கு ராஜபக்சேவின் குடும்பமும், டெல்லியில் மைய ஆட்சியில் இருந்த காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசும், விடுதலைப்புலிகள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்த அன்றைய தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி மற்றும் அவரது மகள் கனிமொழி உள்ளிட்ட அவரது குடும்பமும் தான் முக்கிய காரணகர்த்தாக்களாக இருந்தார்கள் என்று சமூக ஊடகச் செய்திகளும், வீடியோ பதிவுகளும் உறுதிப்படுத்துகின்றன.

கனிமொழி

ஈழத்தமிழினப் படுகொலைக்கு முக்கிய காரணமானவர்களான அன்றைய காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியாளர்களையும், அவர்கள் சார்பில் சிங்கள அதிபர் ராஜபக்சேவை சந்தித்து வாழ்த்துக் கூறி பரிசு பொருட்களை பெற்றுவந்த கனிமொழி தலைமையிலான குழுவினரையும், இனப்படுகொலைக்கு காரணமான போர்க் குற்றவாளிகள் என்று அடையாளங் கண்டு ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச நாடுகளும், இந்திய அரசாங்கமும் உரிய சட்ட நடவடிக்கைகளை விரைவாக எடுத்து, தக்க தண்டனை வழங்க அ.தி.மு.க. பெரிதும் வலியுறுத்தும்.

* 2009-ல் மத்தியில் ஆட்சிபுரிந்த காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசு படை உதவி, ஆயுத உதவி மற்றும் பொருளுதவி அளித்ததின் அடிப்படையில், ஈழத்தில் சிங்கள அரசால் வெறித்தனமாக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் குறித்தும், இந்த இனப் படுகொலைகளுக்கு காரணமாக, போர்க்குற்றவாளிகளை இனம் காண்பது குறித்தும், நம்பிக்கைத்தன்மையுள்ள பன்னாட்டு விசாரணையை ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஈழத் தமிழரின் கோரிக்கைகள் குறித்து தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், அழுத்தம் கொடுப்பதற்கு இந்திய அரசையும், ஐக்கிய நாடுகள் அமைப்பையும், ஏனைய பன்னாட்டு அமைப்புகளையும் அ.தி.மு.க. வலியுறுத்தும்.

இலங்கை தமிழர்கள்

* இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு, இலங்கை அரசு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும், இலங்கையில் வாழும் ஏனைய குடிமக்களுக்கு சமமாக தமிழர்களுக்கும் உரிமைகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதற்கும், மாகாணங்களுக்கு முறையான அதிகாரப்பகிர்வு முறை கொண்டுவர வேண்டும் என்று இலங்கை அரசுக்கு திடமான அழுத்தம் கொடுக்குமாறும் மத்திய அரசை அ.தி.மு.க. வலியுறுத்தும்.

* போரில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு, வேளாண்மை, வீட்டுவசதி, தொழிலகங்கள் மற்றும் கல்வி ஆகியவை தொடர்பாக முழு அளவில் மறுவாழ்வு அளிக்க, இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறும் மத்திய அரசை அ.தி.மு.க. வலியுறுத்தும்.

* இந்திய உச்சநீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டவாறும், தமிழ்நாடு அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டவாறும் 7 தமிழர்களையும் விடுவிப்பதற்கு, தமிழக கவர்னருக்கு உரிய உத்தரவு பிறப்பிப்பதற்கு மத்திய அரசையும், ஜனாதிபதியையும் அ.தி.மு.க. வலியுறுத்தும்.

* காவிரி-கோதாவரி நதிகள் இணைப்புத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்திட வேண்டும் என்று அ.தி.மு.க. மத்திய அரசை வலியுறுத்தும்.

நிறைவேற்றப்படும்

அ.தி.மு.க. வேட்பாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை, உண்மை உணர்வோடும், மனசாட்சியோடும், நேர்மையோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும், தூய்மையோடும் துரிதமாகவும் நிறைவேற்றுவார்கள் என்று அ.தி.மு.க. தெரிவித்துக்கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story