‘ஸ்டெர்லைட் விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம்’ தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு


‘ஸ்டெர்லைட் விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம்’ தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 25 March 2019 3:30 AM IST (Updated: 25 March 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று காலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் சுமார் 1½ அடி நீளமுள்ள வெள்ளிவேலை சுவாமிக்கு காணிக்கையாக கோவில் உண்டியலில் செலுத்தினார்.

அதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் இன்று (திங்கட்கிழமை) வேட்பு மனுதாக்கல் செய்கிறேன். இந்த தொகுதியை எப்படி மேம்படுத்துவது, வேலைவாய்ப்பு ஏற்படுத்துவது, பொருளாதாரத்தை மேம்படுத்துவது என்பதை விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்ந்து இருக்கிறோம். அவை அனைத்தும் ஒரு தொகுப்பாக மாற்றி 27-ந் தேதி வெளியிட இருக்கிறோம்.

ஜனநாயகம் இல்லை

மத்தியில் மோடி ஆட்சிக்கு வரவேண்டும். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி பலம்பெற வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கமாகவும் இருக்கிறது.

தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க.வில் ஒருவர் மட்டுமே விருப்ப மனு போட்டுள்ளார். அவர் மட்டுமே வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதில் இருந்து தி.மு.க.வில் ஜனநாயகம் இல்லை என்று தெரிகிறது. ஆனால் பா.ஜனதாவில் ஜனநாயக முறைப்படி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

இரட்டை வேடம்

வியாபாரிகள், நெசவாளர்கள் மகிழ்ச்சியாக இல்லை, பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என்று பல பொய்களை வைகோ கூறியுள்ளார். பயிர் காப்பீடு திட்டத்தில் அதிகம் பலன் அடைந்த மாவட்டம் தூத்துக்குடி. சிறுவணிகத்தில் அன்னிய முதலீட்டை தடுத்த கட்சி பா.ஜனதா. முத்ரா கடன் திட்டத்தில் 1 கோடியே 90 லட்சம் பேருக்கு கடன் வழங்கப்பட்டு உள்ளது.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தி.மு.க.வினர் பொய் பிரசாரம் செய்கின்றனர். அங்கு பல பிரச்சினைகளுக்கு காரணம் தி.மு.க. கொடுத்த அனுமதி தான். ஸ்டெர்லைட்டை பொறுத்தவரை தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. மு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரிகம் மிகவும் குறைந்து வருகிறது. பிரதமர் மோடி தமிழகத்துக்கு பிரசாரத்துக்கு வர உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story