மும்பை-லண்டனுக்கு முதல் பயணம் ‘எஸ்.எஸ்.லாயல்டி’ கப்பலின் நூற்றாண்டு விழா சென்னையில் ஒரு வாரம் கொண்டாட்டம்


மும்பை-லண்டனுக்கு முதல் பயணம் ‘எஸ்.எஸ்.லாயல்டி’ கப்பலின் நூற்றாண்டு விழா சென்னையில் ஒரு வாரம் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 30 March 2019 9:30 PM GMT (Updated: 30 March 2019 7:29 PM GMT)

மும்பையில் இருந்து லண்டனுக்கு முதல் பயணம் மேற்கொண்ட ‘எஸ்.எஸ்.லாயல்டி’ கப்பலின் நூற்றாண்டு விழா மற்றும் தேசிய கடல்சார் வார விழா சென்னையில் கொண்டாடப்படுகிறது.

சென்னை,

இந்திய கடல் வரலாற்றில் ‘எஸ்.எஸ்.லாயல்டி’ என்ற கப்பல் முக்கிய பங்கு வகித்தது. 1919-ம் ஆண்டு, ஏப்ரல் 5-ந்தேதி சிந்தியா கப்பல் கம்பெனிக்கு சொந்தமான இந்தியாவின் முதல் நீராவிக் கப்பலான ‘எஸ்.எஸ்.லாயல்டி’ மும்பையில் இருந்து, இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்குச் சென்றது.

இந்தியாவில் இருந்து சர்வதேச கடல் பாதை வழியாக வெளிநாடுகளுக்கு சென்ற முதல் கப்பல் என்ற பெருமையை இது பெற்றது. கப்பலின் முதல் பயணத்தில் 700 பயணிகளுடன், சரக்குகளும் கொண்டு செல்லப்பட்டன. கப்பலில் மகாராஜா கபூர்தாலா மற்றும் அவரது மனைவி மற்றும் காஷ்மீர் மகாராஜா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் பயணம் செய்தனர்.

லண்டனுக்கு ஒரு வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்ட போதிலும், ஆங்கிலேய அதிகாரிகள், எந்த சரக்குகளையும் வழங்காமல், கப்பலை இந்தியாவுக்கு வெறுமையாக திருப்பி அனுப்பினார்கள். இதனால் கப்பல் நிறுவனம் பெரும் இழப்பை சந்தித்தது. முதல் பயணத்திற்கு பிறகு தொடர்ச்சியான அதிகமான முன்பதிவுகள் இருந்தபோதிலும்கூட, ஆங்கிலேய அரசாங்கத்தின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக கப்பலின் நிறைய போக்குவரத்து ரத்து செய்யப்பட்டன.

இந்த கப்பலின் நினைவாகவே 1964-ஆண்டு முதல், ஏப்ரல் 5-ந்தேதி ‘தேசிய கடல்சார் நாள்’ கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டில் கப்பல் துறையின் மகத்தான பணிகள் குறித்து பொதுமக்களுக்கு வெளிக்காட்டவும், கப்பல் துறையின் தேவை குறித்து இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் அந்த வாரம் முழுவதும் தேசிய கடல்சார் வார விழாவாக கொண்டாடப்படுகிறது.

இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான ‘தேசிய கடல்சார் வார விழா’ கடந்த 29-ந்தேதி தொடங்கியது. வருகிற 5-ந்தேதி வரை ஒரு வார காலம் கொண்டாடப்படுகிறது. சென்னையில் மட்டும் தூத்துக்குடி, மும்பை உள்பட நாடு முழுவதும் உள்ள இதர துறைமுகங்களிலும் கடல்சார் வார விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

தேசிய கடல்சார் வார விழாவை ஒட்டி சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கடந்த 29-ந்தேதி கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு வணிக கடற்படை கொடி வழங்கப்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணிக்கு இரண்டாம் உலகப்போரின் போது உயிரிழந்த கடற்படை வீரர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தப்படுகிறது. தொடர்ந்து ஓட்டப்பந்தய போட்டி நடத்தப்படுகிறது.

விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஓவியம், கட்டுரை போட்டிகள், தொழில்நுட்ப வரைபடம் வரைதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. விழாவின் நிறைவு நாளான வருகிற 5-ந்தேதி சென்னை, பாரிமுனையில் உள்ள அண்ணாமலை மன்றத்தில் மாலை நடக்கும் விழாவில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.

இந்த விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்திய ஐ.ஜி. பரமேஷ், கடல்சார் பல்கலைக்கழக துணைவேந்தர் சிவகொழுந்து உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

முன்னதாக 5-ந்தேதி காலை 8 மணிக்கு துறைமுகத்தில் உள்ள கப்பல் சிப்பந்தி மையத்தில் நடக்கும் விழாவில் வணிக கடற்படை கொடி பறக்கவிடப்படுகிறது. மேலும் அன்றைய தினம் நாட்டின் கடல்பகுதி பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றை மக்களுக்கு உணர்த்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

Next Story