அரியலூரில் நள்ளிரவில் பரபரப்பு: துப்பாக்கியால் 9 முறை சுட்ட தேர்தல் பார்வையாளர் பணியில் இருந்து உடனடியாக விடுவிப்பு


அரியலூரில் நள்ளிரவில் பரபரப்பு: துப்பாக்கியால் 9 முறை சுட்ட தேர்தல் பார்வையாளர் பணியில் இருந்து உடனடியாக விடுவிப்பு
x
தினத்தந்தி 1 April 2019 4:30 AM IST (Updated: 1 April 2019 4:27 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் தேர்தல் பார்வையாளர் ஒருவர் நள்ளிரவில் வானத்தை நோக்கி 9 முறை துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அரியலூர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளன. இந்த வாக்குப்பதிவுக்கான நடவடிக்கைகளில் தேர்தல் அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பாதுகாப்பு பணிக்காக தமிழகத்துக்கு துணை ராணுவ படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதைப்போல வட மாநிலங்களை சேர்ந்த ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளராக (போலீஸ்) அரியானா மாநிலத்தை சேர்ந்த ஹேமந்த்கல்சன் என்ற ஐ.பி.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டு இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் வந்த அவர், கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி தேர்தல் பணிகளை கவனித்து வந்தார்.

நேற்று முன்தினம் பகலில் வெளியில் சென்ற ஹேமந்த்கல்சன் மாலையில் சுற்றுலா மாளிகைக்கு திரும்பினார். இரவில் அறையில் தங்கியிருந்த அவர் திடீரென நள்ளிரவு 1 மணிக்கு மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தார். பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அரியலூர் ஆயுதப்படை போலீஸ்காரர் மணிபாலனிடம் சென்று, அவர் வைத்திருந்த துப்பாக்கி பற்றி கேட்டார்.

ஒருகட்டத்தில் அந்த துப்பாக்கியை தருமாறு ஹேமந்த்கல்சன் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், துப்பாக்கியில் தோட்டாக்கள் இருக்கின்றன என்று கூறி மணிபாலன் மறுத்தார். ஆனால் மணிபாலனிடமிருந்த துப்பாக்கியை ஹேமந்த்கல்சன் வலுக்கட்டாயமாக பறித்து வானத்தை நோக்கி 9 முறை சுட்டார். இதில் துப்பாக்கியில் இருந்த 10 தோட்டாக்களில் 9 தோட்டாக்கள் வானத்தை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன.

இதை சற்றும் எதிர்பார்க்காத மணிபாலன் கடும் அதிர்ச்சியடைந்தார். ஹேமந்த்கல்சன் வானத்தை நோக்கி சுட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மாறாக துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரரை நோக்கி சுட்டிருந்தால் ஏதேனும் விபரீதம் ஏற்பட்டிருக்கும். துப்பாக்கி வெடித்த சத்தத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து மணிபாலன் உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். அதே நேரம் ஹேமந்த்கல்சன் எந்த பதற்றமும் இல்லாமல் நேராக தனது அறைக்கு சென்று படுத்து தூங்கினார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் ஆகியோர் நேற்று அதிகாலை 5 மணி அளவில் சுற்றுலா மாளிகைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதில் தேர்தல் பார்வையாளர் ஹேமந்த்கல்சன் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டது உண்மை என தெரியவந்தது. அத்துடன் அவர் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது.

பின்னர் இது குறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கலெக்டர் விஜயலட்சுமி தகவல் தெரிவித்தார். அதன்பேரில், தேர்தல் பார்வையாளர் பணியில் இருந்து ஹேமந்த்கல்சனை உடனடியாக விடுவிக்குமாறு தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி உடனடியாக அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்த உத்தரவையடுத்து ஹேமந்த்கல்சன் உடனடியாக தனது சொந்த மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றார்.

Next Story