குற்றச்சாட்டை நிரூபிக்க தவறினால் அரசியலில் இருந்து விலக மு.க.ஸ்டாலின் தயாரா? டாக்டர் ராமதாஸ் கேள்வி


குற்றச்சாட்டை நிரூபிக்க தவறினால் அரசியலில் இருந்து விலக மு.க.ஸ்டாலின் தயாரா? டாக்டர் ராமதாஸ் கேள்வி
x
தினத்தந்தி 3 April 2019 2:30 AM IST (Updated: 3 April 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

வன்னியர் கல்வி அறக்கட்டளை சொத்து தொடர்பான குற்றச்சாட்டை நிரூபிக்க தவறினால் அரசியலில் இருந்து விலக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தயாரா? என்று டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அவதூறுகளை பரப்புகிறார்

ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு என்பார்கள். அத்துடன் கூடுதலாக தோல்வி பயமும் கண்ணை மறைப்பதால் பா.ம.க.வையும், என்னையும், எனது குடும்பத்தினரையும் பற்றி அருவருக்கத்தக்க அவதூறுகளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்பி வருகிறார். தாம் வகிக்கும் பதவிக்கு சிறிதும் தகுதியற்ற வகையில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ள தகவல்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.

மு.க.ஸ்டாலின் முதலில் ஓர் உண்மையை புரிந்துகொள்ள வேண்டும். வன்னியர் கல்வி அறக்கட்டளை என்பது மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர வேண்டும் என்ற புனிதமான நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட உன்னதமான அமைப்பு ஆகும். அது தி.மு.க. அறக்கட்டளை, முரசொலி அறக்கட்டளை போன்று பினாமி சொத்துகளை பதுக்கிவைப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல என்பதை ஓர் கட்சியின் தலைவராக உள்ள ஸ்டாலின் புரிந்துகொள்ள வேண்டும்.

பகிரங்க குற்றச்சாட்டு

வன்னியர் கல்வி அறக்கட்டளையின் நிர்வாகம் ஒரு திறந்த புத்தகம். ஸ்டாலின் விரும்பினால் அவரது கட்சியில் உள்ள தலைசிறந்த வழக்கறிஞர்கள் மற்றும் தணிக்கையாளர்களைக் கொண்டு ஓர் ஆய்வுக்குழுவை அமைக்கட்டும். அந்த குழு வன்னியர் கல்வி அறக்கட்டளையின் ஆவணங்களை ஆய்வு செய்யட்டும். அவர் கூறியவாறு ஏதேனும் ஒரு சொத்து, அவ்வளவு ஏன், வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான 10 பைசா மதிப்புள்ள குண்டூசியை என் மனைவி பயன்படுத்துவதாக ஸ்டாலின் அனுப்பும் குழு கண்டுபிடித்தால் கூட, நான் பொது வாழ்க்கையில் இருந்து விலகிக்கொள்கிறேன்.

அதேநேரத்தில் வன்னியர் கல்வி அறக்கட்டளை சொத்துகளை நான் எனது மனைவி பெயருக்கு மாற்றி எழுதியிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என்றால் அரசியலில் இருந்தும், பொதுவாழ்க்கையில் இருந்தும் ஸ்டாலின் விலகத் தயாரா? வன்னியர் கல்வி அறக்கட்டளை சொத்துகள் அனைத்தும் முறைப்படி வாங்கப்பட்டவை. அதையும் ஆய்வு செய்து உறுதி செய்து கொள்ளலாம். மாறாக, பல மாவட்டங்களில் தி.மு.க. அறக்கட்டளைக்காக சேர்க்கப்பட்டுள்ள சொத்துகள் வளைக்கப்பட்டவை என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகிறேன். அவற்றை ஆய்வு செய்ய ஸ்டாலின் அனுமதிப்பாரா?

பாடம் புகட்டுவார்கள்

தி.மு.க.வில் உள்ள வன்னியர்களாக இருந்தாலும், பொதுவான வன்னியர்களாக இருந்தாலும் சிங்கங்களைத் தான் மதிப்பார்கள். சிறு நரிகளின் கதறல்களை கண்டுகொள்ள மாட்டார்கள். இன்னும் 15 நாட்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தி.மு.க.வுக்கு அவர்கள் பாடம் புகட்டுவார்கள். அனைத்து தொகுதிகளிலும் வீழ்த்துவார்கள். இது உறுதி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
1 More update

Next Story