ராஜராஜசோழனுக்கு சிலை வைப்பது தொடர்பாக ஆலோசனை அளிக்க தொல்லியல் நிபுணர்கள் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

ராஜராஜ சோழனுக்கு சிலை அமைப்பது தொடர்பாக தொல்லியல் நிபுணர்கள் நேரில் ஆஜராகி, ஆலோசனை தெரிவிக்க மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மதுரை,
ராமநாதபுரத்தை சேர்ந்த வக்கீல் திருமுருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
சோழ சாம்ராஜியத்தின் பேரரசர் முதலாம் ராஜராஜசோழன் ஆட்சி காலத்தில் நுண் கலை, கட்டிடக்கலை, இலக்கியம் என பல துறைகள் சிறந்து விளங்கின. இதற்கான சான்றாக தஞ்சை பெரியகோவில் உள்ளது.
ராஜராஜசோழன் ஆட்சியும், கட்டிடக்கலையும் இன்றும் உலக அளவில் பாராட்டப்பட்டு வருகிறது. ஆனால் அவரது நினைவிடம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உடையாளூர் என்ற கிராமத்தில் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த கிராமத்தை சுற்றி ஆரியப்படை, சோழ மாளிகை, பட்டீஸ்வரம் போன்ற கிராமங்கள் உள்ளன.
அங்கும் ராஜராஜசோழன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட அரண்மனை மற்றும் மாளிகைகள் உள்ளன. அங்கு முறையாக தொல்லியல் துறை ஆய்வு செய்தால் சோழர்களின் வரலாற்று சான்றுகள் கிடைக்கும். ராஜராஜசோழனின் புகழை பறைசாற்றும் வகையில் அவரது சிலையை இந்திய பெருங்கடல் அல்லது வங்க கடல் ஓரத்தில் அமைக்கவும், அவரது நினைவிடத்தில் மணிமண்டபம் கட்டி, சுற்றுலாத்தலமாக மேம்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் மற்றும் சிலை அமைப்பது தொடர்பாக தொல்லியல் நிபுணர்கள் மதுரை சாந்தலிங்கம், குடவாயில் பாலசுப்பிரமணியம் ஆகியோர் வருகிற திங்கட்கிழமை நேரில் ஆஜராகி, ஆலோசனை தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story






