தேர்தல் கருத்து கணிப்பு புத்தகங்கள் பறிமுதல்


தேர்தல் கருத்து கணிப்பு புத்தகங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 3 April 2019 3:30 AM IST (Updated: 3 April 2019 2:04 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையில் தேர்தல் கருத்து கணிப்பு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தஞ்சாவூர்,

தஞ்சை விளார் பைபாஸ் சாலையில் பறக்கும் படையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சென்னையில் இருந்து தஞ்சையை நோக்கி வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அந்த லாரியில் பண்டல், பண்டல்களாக புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அந்த புத்தகங்கள் நாஞ்சிக்கோட்டை பகுதிக்கு கொண்டு செல்வதாக ஆட்டோ டிரைவர் தெரிவித்தார்.

கருத்து கணிப்பு புத்தகங்கள்

இதையடுத்து அதிகாரிகள் அந்த புத்தகங்களை பார்த்தபோது அதில் அரசியல் கட்சி தலைவர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சசிகலா, நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெற்று இருந்தன.

அந்த புத்தகத்தின் பெயர் அடுத்த ஆட்சி. ஜோதிட ஆய்வு என குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் அதில் அரசியல் கட்சி தலைவர்களின் எதிர்கால வாழ்க்கை, தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள், யார் ஆட்சிக்கு வருபவார்கள் என குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் அந்த புத்தகத்தை எழுதியவர் பெயரும் இருந்தது. ஆனால் விலை குறிப்பிடவில்லை. மொத்தம் 29 ஆயிரம் புத்தகங்கள் இருந்தன. அவைகளை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து தஞ்சை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

Next Story