தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள லோக் ஆயுக்தா தலைவராக நீதிபதி பி.தேவதாஸ் நியமனம் அரசிதழ் வெளியீடு

தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள லோக் ஆயுக்தா அமைப்புக்கு தலைவராக முன்னாள் நீதிபதி பி.தேவதாஸ் மற்றும் உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
உயர் அதிகாரத்தில் உள்ளவர்களையும் விசாரிக்கக்கூடிய லோக் ஆயுக்தா என்ற அமைப்பை மாநில அரசுகள் அமைக்க வேண்டும் என்று லோக் பால் சட்டம் மூலம் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. தமிழகத்தில் லோக் ஆயுக்தா தொடர்பான சட்ட மசோதா 2018-ம் ஆண்டு ஜூலை 9-ந்தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அது குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி பாரி, முன்னாள் அட்வகேட் ஜெனரல் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அடங்கிய தேடுதல் குழு, லோக் ஆயுக்தாவுக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை கடந்த மார்ச் 13-ந்தேதியன்று தேர்வு செய்தது.
அரசிதழ் வெளியீடு
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், இந்த அறிவிப்பை வெளியிட இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மார்ச் 25-ந்தேதியன்று தமிழக அரசு கடிதம் எழுதியது.
அதைத் தொடர்ந்து தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவின் மூலம் தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைக்கப்பெற்று 1-ந்தேதியன்று அரசிதழை தமிழக அரசு வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
5 ஆண்டு பதவி
தமிழகத்தில் அமைக்கப்படும் லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக சென்னை ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி பி.தேவதாஸ் இருப்பார். ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் கே.ஜெயபாலன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நீதிப்பிரிவு உறுப்பினர்களாக பணியாற்றுவார்கள்.
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.ராஜாராம், வக்கீல் கே.ஆறுமுகம் ஆகியோர் அதன் நீதிப்பிரிவு அல்லாத உறுப்பினர்களாக செயல்படுவார்கள். இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது அவர்கள் 70 வயதை அடையும் நாள் வரையில், இதில் எது முன்னதாக நிகழ்கிறதோ அதுவரை நீடிக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எளிமையானவர்
லோக் ஆயுக்தாவில் நடக் கும் விசாரணை முழுவதும் பொதுவாக அல்லாமல் மூடப்பட்ட அறைக்குள் ரகசியமாக நடக்கும் என்பதால், பல்வேறு விமர்சனங்களுக்கு இந்த அமைப்பு உள்ளாகியுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பரில் ஐகோர்ட்டின் நீதிபதியாக பதவி ஏற்றவர் பி.தேவதாஸ். முன்னதாக சென்னை குடும்பநல கோர்ட்டு முதன்மை நீதிபதி, சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகிய பதவிகள் உள்பட நீதித்துறையில் பல்வேறு முக்கிய பதவிகளை ஆற்றியுள்ளார். அனைவரிடமும் பழகுவதில் எளிமையானவர்.
40 புத்தகங்கள் எழுதியவர்
1992-ம் ஆண்டில் தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவி ஏற்றவர் எம்.ராஜாராம். பணியில் இருந்த 36 ஆண்டுகளில் மாநில அரசில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவர் அவர். உதவி நாடி வருபவர்களுக்கு உடனடியாக உதவிக்கரம் நீட்டி, மனிதநேயர் என்ற பெயரை ஈட்டியவர்.
தரமான கல்வி நிர்வாகம், பூனைக்கு மணி கட்டுவது யார்?, வெற்றிக்கான கடவுச்சீட்டு, திருக்குறளின் மகத்துவம் என்பது உள்பட 40-க்கும் மேற்பட்ட புத்தகங்களை அவர் எழுதி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






