மதுரையில் 47 கிலோ தங்கம் சிக்கியது தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை


மதுரையில் 47 கிலோ தங்கம் சிக்கியது தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 4 April 2019 4:45 AM IST (Updated: 4 April 2019 2:45 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் வேனில் கொண்டு சென்ற 47 கிலோ தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மதுரை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வண்ணம் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காலை மதுரை அய்யர்பங்களா பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்றை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், பெட்டி, பெட்டியாக தங்க கட்டிகள் மற்றும் தங்க நகைகள் இருந்தன. உடனே அதிகாரிகள் அதனை எடை போட்டு பார்த்தனர். அதில் 47 கிலோ தங்கம் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், மதுரையில் இருந்து சேலத்தில் உள்ள நகை கடைகளுக்கு தங்கம் கொண்டு செல்வது தெரியவந்தது. ஆனால் அதற்குரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் வேனுடன் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

சேலைகள் பறிமுதல்

தேனி மாவட்டம் கம்பம் அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள ஆம்னி பஸ் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 11 பண்டல்களில் இருந்த இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்ட 1,000 சேலைகளை பறிமுதல் செய்தனர்.

சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதிக்குட்பட்ட இரும்பாலை சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 340 சேலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.6 லட்சத்து 29 ஆயிரத்து 950 சிக்கியது.

Next Story