விரல் ரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு விவகாரம்: போலி அறிக்கை தயாரித்து கொடுத்த தேர்வாணைய ஆலோசகர் கைது


விரல் ரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு விவகாரம்: போலி அறிக்கை தயாரித்து கொடுத்த தேர்வாணைய ஆலோசகர் கைது
x
தினத்தந்தி 4 April 2019 3:00 AM IST (Updated: 4 April 2019 2:54 AM IST)
t-max-icont-min-icon

விரல் ரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி தொடர்பான வழக்கில், சென்னை ஐகோர்ட்டுக்கு போலி அறிக்கையை தயார் செய்து கொடுத்த தேர்வாணைய ஆலோசகர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

தமிழக விரல் ரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பணிக் கான தேர்வை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. இந்த தேர்வில் பங்கேற்ற போலீஸ்காரர் எஸ்.அருணாச்சலம், கணிதம் தொடர்பான ஒரு கேள்விக்கு அளித்த பதில் தவறு என்று கூறி, அதற்கு மதிப்பெண் வழங்கவில்லை. இதை எதிர்த்து அவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இது பற்றி, சென்னை ஐ.ஐ.டி.யில் பணியாற்றும் கணித நிபுணர் ஒருவரிடம் கருத்து கேட்டு உரிய அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி ஐ.ஐ.டி. பேராசிரியர் டி.மூர்த்தி (வயது 63) அளித்த அறிக்கை, ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் அருணாச்சலம் அளித்த பதில் தவறானது என்று தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அருணாச்சலம் தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

போலி அறிக்கை

இதனால் அருணாச்சலம், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தார். அதில், ஐ.ஐ.டி. பேராசிரியர் டி.மூர்த்தி பெயரில் தாக்கல் செய்த அறிக்கை போலியானது என்றும், டி.மூர்த்தி என்ற பேராசிரியர் சென்னை ஐ.ஐ.டி.யில் பணியாற்றவே இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக சீருடை பணியாளர் தேர்வாணையம், உரிய பதில் மனுதாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்பேரில் சீருடை பணியாளர் தேர்வாணைய ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், உளவியல் நிபுணரான ஜி.வி.குமார் (52) சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஆலோசகராக உள்ளார். இவர் தான் ஐ.ஐ.டி. பேராசிரியர் என்று டி.மூர்த்தியை அதிகாரிகளிடம் அறிமுகம் செய்து, அவரிடமிருந்து அறிக்கையும் பெற்றுத்தந்தார். இந்த விஷயத்தில் ஜி.வி.குமாரும், டி.மூர்த்தியும் சேர்ந்து, சீருடை பணியாளர் தேர்வாணையத்தை ஏமாற்றி உள்ளனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறியிருந்தார்.

கைது

இந்நிலையில் ஜி.வி.குமார் கைது செய்யப்பட்டார். டி.மூர்த்தியை தேடி வருவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

டி.மூர்த்தி ஓய்வு பெற்ற கணித ஆசிரியர். இவர் ஐ.ஐ.டி. வளாகத்தில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பணியாற்றியவர். இந்த விவகாரத்தில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மீது, சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story