கொடநாடு விவகார பேச்சு மு.க.ஸ்டாலினுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை
கொடநாடு விவகார பேச்சு தொடர்பாக ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை
கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற மர்ம கொலைகள் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் சில முக்கிய ஆவணங்களை வெளியிட்டார்.
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதுகுறித்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின், கொடநாடு எஸ்டேட் வழக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருக்கிறது என்று குற்றஞ்சாட்டி இருந்தார். தமிழக அரசு ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடுத்தது.
கொடநாடு விவகாரம் குறித்து ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஆனால் ஸ்டாலின் தொடர்ந்து தனது பிரச்சாரத்தில் கொடநாடு குறித்து பேசி வந்தார். நேற்று நடந்த பிரச்சாரத்தில் கூட ஸ்டாலின் இதுகுறித்து பிரச்சாரம் செய்தார்.
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட் இந்த வழக்கில் புதிய திருப்பமாக ஸ்டாலினுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து இருக்கிறது. கொடநாடு குறித்து தொடர்ந்து பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும். ஐகோர்ட் உத்தரவையும் மீறி ஸ்டாலின் கொடநாடு குறித்து பேசுவது ஏன்?.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதலமைச்சரை தொடர்புபடுத்தி தொடர்ந்து பேசினால் அவதூறு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும். தொடர்ந்து ஸ்டாலின் பேச விரும்பினால் அவர் வழக்கு விசாரணையையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். விசாரணையை எதிர்கொள்ள ஸ்டாலினுக்கு என்ன தயக்கம்?
ஸ்டாலின் பேசிய வீடியோ ஆதாரங்களை இந்த நீதிமன்றம் விசாரிக்கும். அரசு இது தொடர்பான ஆதாரங்களை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்த வழக்கு விசாரணையில் ஐகோர்ட் மு.க.ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
Related Tags :
Next Story