‘நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் வரம்புக்கு உட்பட்டு விசாரணை நடத்த வேண்டும்’ ஐகோர்ட்டு உத்தரவு


‘நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் வரம்புக்கு உட்பட்டு விசாரணை நடத்த வேண்டும்’ ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 5 April 2019 3:30 AM IST (Updated: 5 April 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தன்னுடைய வரம்புக்குட்பட்டு விசாரணையை மேற்கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தன்னுடைய வரம்புக்குட்பட்டு விசாரணையை மேற்கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஆறுமுகசாமி ஆணையம்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரியும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து 21 டாக்டர்கள் அடங்கிய நிபுணர் குழு மூலமாக விசாரணை நடத்த உத்தரவிடக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கில் “நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையத்தில் மருத்துவ ரீதியிலான விளக்கங்களைப் பதிவு செய்ய மருத்துவ நிபுணர்கள் யாரும் இல்லை. இதனால் டாக்டர்கள் அளிக்கும் சாட்சியங்கள் தவறுதலாக பதிவு செய்யப்படுகிறது. அதேபோல இந்த ஆணையத்தின் விசாரணை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்குள்ள நற்பெயரை கெடுக்கும் வகையிலும் ஒருதலைபட்சமாக உள்ளது. எனவே, விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

இறுதிக்கட்டம்

இந்த வழக்கில் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது முதல் அவருக்கு இறப்பு ஏற்பட்டது வரை அனைத்து விஷயங்களையும் முழுமையாக ஆராயவும், அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தவுமே இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. தற்போது 90 சதவீதம் விசாரணை முடிவடைந்து, இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் விசாரணைக்கு தடை கேட்டுள்ளது” என்று கூறப்பட்டு இருந்தது.

தீர்ப்பு தள்ளிவைப்பு

இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் விசாரித்தனர். அப்போது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், அரசு பிளடர் ஜெயபிரகாஷ் நாராயணன், ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ஆர்.விஜயகுமார், அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் மூத்த வக்கீல்கள் சி.ஆர்யமாசுந்தரம், பி.எஸ்.ராமன், சசிகலா சார்பில் வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங் களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை கடந்த மாதம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் நேற்று வழங்கினர். அதில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-

விசாரணை முடிவடையும் நிலை

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதில் மருத்துவ ரீதியான விவரங்களை பரிசீலிக்க ஏற்கனவே அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழுவை, விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. இந்த குழுவும், அவ்வப்போது மருத்துவ அறிக்கையை ஆணையத்துக்கு தாக்கல் செய்து வருகிறது.

தற்போது 90 சதவீத விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், மருத்துவ நிபுணர்களை நியமிக்க வேண்டும் என்று அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள், எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் என இதுவரை 154 பேர் சாட்சியம் அளித்து விட்டனர்.

துன்புறுத்தல்

அப்போது எல்லாம், அப்பல்லோ சார்பில் டாக்டர்கள் குழு அமைக்க வேண்டும் என்று கூறவில்லை. கடந்த டிசம்பர் மாதம்தான் இந்த கோரிக்கையை ஆணையத்தின் முன்பு வைத்துள்ளது. அதை ஏற்காமல், ஆணையமும் தள்ளுபடி செய்து விட்டது.

அதை தொடர்ந்து, ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க முடியாது என்று அப்பல்லோ ஆஸ்பத்திரி இப்போது கூறுவது வீண் வேலையாகும். அப்பல்லோ ஆஸ்பத்திரியின் இந்த கோரிக்கையை ஏற்க விரும்பவில்லை.

மேலும், விசாரணை ஆணையம் தன்னுடைய விருப்பப்படி விசாரணை மேற்கொள்ள அதிகாரம் உள்ளது. அதேநேரம், தேவையில்லாத கேள்விகளை கேட்டு, சாட்சிகளை துன்புறுத்துகிறது என்று ஆணையத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. சில உண்மைகளை கொண்டு வர அவ்வாறு கேள்விகளை ஆணையம் கேட்டு இருக்கலாம்.

வினோதமான நடைமுறை

அதேநேரம், ஆறுமுகசாமி ஆணையமும் சில வினோதமான நடைமுறைகளை பின்பற்றியுள்ளது. அதாவது, அப்பல்லோ ஆஸ்பத்திரி ஒரு மனு தாக்கல் செய்தால், அந்த மனுவுக்கு ஆணையத்தின் வக்கீல் மூலம், ஆணையம் முன்பு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இது வினோதமான நடைமுறையாக உள்ளது.

அப்பல்லோ மனுவின் மீது விசாரணை ஆணையமே தாமாக முன்வந்து முடிவு எடுத்து உத்தரவு பிறப்பித்து இருக்கலாம். அதற்கு பதில், அந்த மனுவுக்கு ஆணையத்தின் சார்பில் ஆணையமே பதில் மனுவை தாக்கல் செய்வதை தவிர்த்து இருக்கலாம். அதுமட்டுமல்ல, ஆணையத்தின் பதில் மனுவில், அப்பல்லோ ஆஸ்பத்திரி குறித்து கூட்டுச்சதி, மோசடி, உடந்தை என்ற வார்த்தைகள் பயன் படுத்தப்பட்டுள்ளது. இதை ஆணையம் தவிர்த்து இருக்கலாம்.

வரம்பு மீறிய செயல்

இவற்றை எல்லாம் பார்க்கும்போது, ஆறுமுகசாமி ஆணையம் தன்னுடைய வரம்பு மீறி செயல்பட்டுள்ளது என்று அப்பல்லோ ஆஸ்பத்திரி கூறுவதில் உண்மை உள்ளது என்பதை நாங்கள் பார்க்கிறோம். எனவே, ஆறுமுகசாமி ஆணையம் தன்னுடைய வரம்புக்கு உட்பட்டு விசாரணையை மேற்கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம்.

விசாரணை ஆணையம் என்பது உண்மை அறியும் அமைப்புதான். ஒருவரை குற்றவாளி என்றோ, குற்றவாளி இல்லை என்றோ முடிவு செய்து உத்தரவிட முடியாது. ஏன் என்றால் இது இரு தரப்புக்கு இடையேயான வழக்கு இல்லை. எனவே, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து ஆணையம் அறிக்கை தாக்கல் செய்யும். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரையின் அடிப்படையில், அரசு தான் இறுதி முடிவு எடுக்கும். அவ்வாறு அரசு முடிவு எடுக்கும்போது, அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் கருத்தையும் அரசு கேட்கவேண்டும். இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Next Story