அமெரிக்காவில் பரிசோதனை: ஆதிச்சநல்லூர் அகழாய்வில் எடுத்த பொருள் கி.மு.905-ம் ஆண்டை சேர்ந்தது மதுரை ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்


அமெரிக்காவில் பரிசோதனை: ஆதிச்சநல்லூர் அகழாய்வில் எடுத்த பொருள் கி.மு.905-ம் ஆண்டை சேர்ந்தது மதுரை ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 5 April 2019 3:45 AM IST (Updated: 5 April 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவில் செய்த பரிசோதனை முடிவுகளின்படி, ஆதிச்சநல்லூர் அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருள் கி.மு. 905-ம் ஆண்டை சேர்ந்தது என்று மதுரை ஐகோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மதுரை, 

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘ஆதிச்சநல்லூர், தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடம். அங்கிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில்தான் பாண்டிய நாட்டின் தலைநகரான கொற்கை அமைந்துள்ளதாக வரலாறு கூறுகிறது. இதனால் இங்கு அகழாய்வு பணிகள் கடந்த 2004-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அப்போது அங்கு 114 ஏக்கர் பரப்பளவில் இடுகாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஏராளமான பழங்கால பொருட்களும் கண்டெடுக்கப்பட்டன.

அங்கு இதுவரை 4 கட்ட அகழாய்வு நடத்தப்பட்டுள்ளது. இதன் அறிக்கை தற்போது வரை வெளியிடப்படவில்லை. எனவே ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிடவும், அங்கு மீண்டும் அகழாய்வு நடத்தவும், கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்களை அங்கேயே காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

கார்பன் பரிசோதனை

இந்த மனுக்கள் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, ஆதிச்சநல்லூரில் நடந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கார்பன் பரிசோதனைக்கு அனுப்பும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்பேரில் அந்த பொருட்களின் மாதிரி, தொல்லியல் துறையினர் சார்பில் கார்பன் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கி.மு.905-ம் ஆண்டை சேர்ந்தது

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கதிர்வேலு ஆஜராகி, “கார்பன் சோதனைக்காக அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட 2 பொருட்கள் பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகள் கிடைத்துள்ளன. அதன்படி, ஒரு பொருள் கி.மு.905-ம் ஆண்டையும், மற்றொன்று கி.மு.791-ம் ஆண்டையும் சேர்ந்தது என தெரியவந்துள்ளது. இதுதொடர்பான அறிக்கை தயாரிக்க கால அவகாசம் வழங்க வேண்டும்” என்றார்.

அதேபோல, “தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்துகள் கி.மு.395-ம் ஆண்டு காலத்தை சேர்ந்தவை” என்றும் தெரிவித்தார்.

பாடியூர், ரவிமங்கலம்

அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.அழகுமணி ஆஜராகி, “திண்டுக்கல் மாவட்டம் பாடியூரில் தொல்லியல் துறைக்கு சொந்தமான இடத்தில் பள்ளிக்கூடம் கட்டி ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. பழனி ரவிமங்கலத்தில் முதுமக்கள் தாழிகள் ஏராளமாக உள்ளன. இதுபற்றியும் ஆய்வு நடத்த வேண்டும்” என்றார்.

முடிவில், “கார்பன் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் அடுத்தகட்ட அகழாய்வு பணியை மத்திய அரசு மேற்கொள்ளுமா? அல்லது மாநில அரசு மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுமா? என்பது குறித்து மத்திய தொல்லியல்துறை பதில் அளிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 11-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story