சென்னையில் பறக்கும் படை சோதனையில் ரூ.14¾ லட்சம் சிக்கியது
சென்னையில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.14 லட்சத்து 71 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவொற்றியூர்,
சென்னை எண்ணூரில் அதிகாரி நிர்மல்குமார் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவன வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் ரூ.11 லட்சம் இருந்தது. வாகனத்தில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து 14 ஏ.டி.எம்.களில் நிரப்புவதற்காக ரூ.84 லட்சத்துடன் வந்ததாகவும், அதில் 10 ஏ.டி.எம்.களில் ரூ.73 லட்சம் நிரப்பியது போக மீதம் உள்ள ரூ.11 லட்சத்துடன் எண்ணூர் அன்னை சிவகாமி நகர் பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு செல்வதாகவும் தெரிவித்தனர்.
ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.11 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பொன்னேரியில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
எண்ணூர்
இதேபோல் எண்ணூர் அத்திப்பட்டு மேம்பாலம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மீஞ்சூரில் இருந்து திருவொற்றியூர் நோக்கி வந்த சிவகுமார் சர்மா என்பவரது காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் அடையாறு இந்திரா நகரில் வாகன சோதனையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படையினர், அந்த வழியாக காரில் வந்த நடராஜன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story