கொருக்குப்பேட்டை போலீஸ் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


கொருக்குப்பேட்டை போலீஸ் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 April 2019 3:30 AM IST (Updated: 7 April 2019 1:21 AM IST)
t-max-icont-min-icon

கொருக்குப்பேட்டை போலீஸ் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பூர்

சென்னை கொருக்குப்பேட்டை ஆர்.கே.நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவருடைய மனைவி விஜயலட்சுமி(வயது 45). இவர், அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர், மகேஸ்வரி என்பவர் தலைமையிலான மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ளார்.

மகளிர் உதவி குழுவில் விஜயலட்சுமி ரூ.40 ஆயிரம் கடன் வாங்கியதாகவும், அதை தலைவி மகேஸ்வரியிடம் செலுத்தி விட்டதாகவும் தெரிகிறது.

இதற்கிடையில் விஜயலட்சுமி, அதே பகுதியில் உள்ள வங்கியில் தனிநபர் கடனுக்காக விண்ணப்பித்தார். அப்போது அந்த வங்கி ஊழியர்கள், “நீங்கள் மகளிர் சுய உதவி குழுவில் வாங்கிய கடன் நிலுவையில் உள்ளதால் மேற்கொண்டு கடன் வழங்க முடியாது” என மறுத்ததாக கூறப்படுகிறது.

தீக்குளிக்க முயற்சி

இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி, இதுபற்றி மகளிர் சுய உதவிக்குழு தலைவி மகேஸ்வரியிடம், தான் வாங்கிய கடனை திருப்பி செலுத்திய பிறகும் வங்கியில் பாக்கி உள்ளதாக கூறுகிறார்களே? என்று விவரம் கேட்டார். ஆனால் அதற்கு அவர் சரியான பதில் அளிக்கவில்லை.

இதில் மனமுடைந்த விஜயலட்சுமி, நேற்று கொருக்குப்பேட்டை போலீஸ் நிலையம் முன் திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். சப்-இன்ஸ்பெக்டர் வித்யா மற்றும் போலீசார் விஜயலட்சுமியை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.

பின்னர் விஜயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் மகளிர் சுய உதவிக்குழு தலைவி மகேஸ்வரியை போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
1 More update

Next Story