டிரெய்லர் லாரிக்குள் கார் புகுந்து நொறுங்கியது முன்னாள் எம்.எல்.ஏ.-மனைவி உள்பட 3 பேர் பலி
ஆம்பூர் அருகே டிரெய்லர் லாரிக்குள் கார் புகுந்து நொறுங்கியதில் முன்னாள் எம்.எல்.ஏ., அவர் மனைவி உள்பட 3 பேர் பலியானார்கள்.
வேலூர்,
வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை சேர்ந்தவர் ஏ.கே.சி.சுந்தரவேல் (வயது 71). இவர், கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினராகவும், 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை திருப்பத்தூர் நகரசபை தலைவராகவும் பொறுப்பு வகித்தார். இவரது மனைவி விஜயலட்சுமி (65). இந்த நிலையில் கணவன் - மனைவி இருவரும் மாதந்தோறும் சென்னையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு செல்வது வழக்கம்.
அதன்படி, நேற்று காலை ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக கணவன்-மனைவி இருவரும் காரில் சென்னைக்கு புறப்பட்டனர். காரை திருப்பத்தூர் பக்ரிதக்கா, இந்திரா காலனி பகுதியை சேர்ந்த வீரமணி (46) என்பவர் ஓட்டினார். வீட்டில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்ட கார் வாணியம்பாடியை கடந்து விண்ணமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றது.
அப்போது முன்னால் பாய்லர் ஏற்றிக்கொண்டு டிரெய்லர் லாரி சென்றது. காரை டிரைவர் வீரமணி வேகமாக ஓட்டிச் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து டிரெய்லர் லாரியின் பின்பக்கம் பயங்கரமாக மோதியது. இதில் கார் முழுவதும் டிரெய்லர் லாரிக்குள் புகுந்து கொண்டது.
3 பேர் பலி
இந்த விபத்தில் ஏ.கே.சி.சுந்தரவேல், விஜயலட்சுமி, வீரமணி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று டிரெய்லர் லாரிக்குள் புகுந்த காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை.
இதைத்தொடர்ந்து ஆம்பூரில் இருந்து தீயணைப்பு வீரர்களும், ராட்சத கிரேனும் வரவழைக்கப்பட்டது. சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு டிரெய்லர் லாரிக்குள் புகுந்த கார் வெளியே எடுக்கப்பட்டது. பின்னர் காரில் இருந்த 3 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணை
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் இறந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.கே.சி.சுந்தரவேல், தற்போது திருப்பத்தூர் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நகர செயலாளராக இருந்தார். ஏ.கே.சி.சுந்தரவேலுக்கு யோகலட்சுமி என்ற மகளும், 2 பேத்திகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story