புளியந்தோப்பில் பரிதாபம் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய்-மகள் பலி


புளியந்தோப்பில் பரிதாபம் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய்-மகள் பலி
x
தினத்தந்தி 6 April 2019 9:30 PM GMT (Updated: 2019-04-07T01:51:38+05:30)

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தாயும், மகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திரு.வி.க. நகர், 

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தாயும், மகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக வீட்டின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

மேற்கூரை இடிந்து விழுந்தது

சென்னை புளியந்தோப்பு வெங்கடேசபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 35). இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா (31). நர்சாக வேலை செய்து வந்தார்.

இவர்களுக்கு யுவஸ்ரீ (8) என்ற மகளும், கிருஷ்ணகுமார் (4) என்ற மகனும் இருந்தனர். யுவஸ்ரீ அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் இரவு வெங்கடேசன் குடும்பத்துடன் சாப்பிட்டு விட்டு படுக்க சென்றார்.

வெங்கடேசன் மகன் கிருஷ்ணகுமாருடன் கட்டிலில் உறங்கினார். சங்கீதா மகள் யுவஸ்ரீயுடன் தரையில் பாய் விரித்து உறங்கினார். அனைவரும் உறங்கி கொண்டிருந்த நிலையில், நள்ளிரவில் வீட்டின் மேற்கூரையில் இருந்த கான்கிரீட்டின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

தாய்-மகள் பலி

தரையில் படுத்திருந்த சங்கீதா மற்றும் யுவஸ்ரீ மீது இடிபாடுகள் விழுந்தன. ஆனால் வெங்கடேசன் மற்றும் அவரது மகன் தப்பினர். இதில் பலத்த காயம் அடைந்த சங்கீதா மற்றும் யுவஸ்ரீ ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சங்கீதா இறந்துவிட்டார். சிறுமி யுவஸ்ரீ தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாள். அடுத்த 2 மணி நேரத்தில் சிகிச்சை பலன் இன்றி யுவஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தாள்.

இதுகுறித்து வெங்கடேசன் கூறுகையில், ‘இந்த வீட்டில் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு வாடகைக்கு வந்தேன். வீட்டின் மேற்கூரை பலவீனமாக இருப்பதை அறிந்து உரிமையாளர் மாரியப்பனிடம் அதை சரிசெய்து தருமாறு கூறி வந்தேன். இந்த நிலையில் இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டு என் மனைவியும், குழந்தையும் பலியாவார்கள் என்று நான் நினைக்கவில்லை’ என்று கூறியபடி கதறி அழுதார்.

இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்குபதிவு செய்து வீட்டின் உரிமையாளர் மாரியப்பனை கைது செய்தனர். பின்னர் அவர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Next Story