‘தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது’ நெல்லை பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


‘தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது’ நெல்லை பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 7 April 2019 4:00 AM IST (Updated: 7 April 2019 2:04 AM IST)
t-max-icont-min-icon

‘வன்முறை கலாசாரத்தை கட்டவிழ்த்து விடுவது தி.மு.க.வினர்தான். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது’ என்று நெல்லை பிரசாரத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

நெல்லை, 

நெல்லை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியனை ஆதரித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நெல்லையை அடுத்த தாழையூத்து பகுதியில் நேற்று மாலை பிரசாரம் செய்தார். அவர் திறந்த ஜீப்பில் சென்று இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஜனநாயக நாட்டில் வாக்காளர்களே நீதிபதிகள். நீங்கள் தீர்ப்பு அளிக்கும் நேரம் வந்து விட்டது. நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் என உங்களை கேட்டு கொள்கிறேன். மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தமிழ்நாட்டில் நல்லாட்சி கொடுத்தனர். அவர்கள் எந்த அளவுக்கு சிறப்பான முறையில் ஆட்சி நடத்தினார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

மு.க.ஸ்டாலினால் அழிக்க முடியுமா?

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து பல தொல்லைகள் கொடுத்தார். அந்த எதிர்ப்புகளை எல்லாம் சமாளித்து ஜெயலலிதா பல திட்டங்களை அறிவித்தார். தற்போது, 60 லட்சம் தொழிலாளர்களுக்கு இலவசமாக வீடுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க முடிவு செய்தோம். அதை கூட வழங்க விடாமல் தி.மு.க.வினர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்று விட்டனர். தேர்தலுக்கு பின்னர் அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். அ.தி.மு.க.வை அழிக்க, கருணாநிதி எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியவில்லை. மு.க.ஸ்டாலினால் அழிக்க முடியுமா? எந்த கொம்பன் வந்தாலும் அ.தி.மு.க. என்ற இயக்கத்தை அழிக்க முடியாது.

சாதி, மத மோதல்கள் இல்லை

மு.க.ஸ்டாலின் பிரசார கூட்டத்தில் எங்களை தரக்குறைவாக விமர்சனம் செய்து வருகிறார். இதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். வன்முறை கலாசாரத்தை கட்டவிழ்த்து விடுவது தி.மு.க. வினர்தான். பொதுமேடையில் தனிநபர் விமர்சனத்தை ஸ்டாலின் தவிர்க்க வேண்டும்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. சாதி, மத மோதல்கள் இல்லை. சிறுபான்மை மக்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். உங்கள் தொகுதிக்கு நல்ல வேட்பாளரை அறிமுகப்படுத்தி உள்ளோம். அவரை வெற்றி பெற செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

இதைத்தொடர்ந்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாழையூத்தில் இருந்து பணகுடி புறப்பட்டு சென்றார். அங்கும் அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியனை ஆதரித்து திறந்த ஜீப்பில் பிரசாரம் செய்தார். பின்னர் அவர் பிரசாரத்தை முடித்து விட்டு கன்னியாகுமரி புறப்பட்டு சென்றார்.

Next Story