நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி: டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் தள்ளிவைப்பு அடுத்த மாதம் 5, 11 ஆகிய தேதிகளில் நடக்கிறது


நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி: டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் தள்ளிவைப்பு அடுத்த மாதம் 5, 11 ஆகிய தேதிகளில் நடக்கிறது
x
தினத்தந்தி 8 April 2019 2:01 AM IST (Updated: 8 April 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தல் எதிரொலியாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் அடுத்த மாதம் 5 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

சென்னை,

முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் காலி பணி இடங்களை நிரப்புவதற்கு வருகிற 20-ந்தேதியும், வேதியியலர், இளநிலை வேதியியலர் பணி, உதவி புவியியலர், புவி வேதியியலர், அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் துணை கண்காணிப்பாளர் பணி இடங்களுக்கு 21-ந்தேதியும் தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்திருந்தது.

இந்தநிலையில் இந்த தேர்வுகள் திடீரென்று தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் க.நந்தகுமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் வருகிற 18-ந்தேதி நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதாக அறிவித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு நிர்வாக காரணங்களுக்காக வருகிற 20 மற்றும் 21-ந்தேதிகளில் நடைபெற இருந்த எழுத்து தேர்வுகளை பின் வரும் தேதிகளில் நடத்துவதற்கு தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. மாற்றப்பட்ட தேர்வு தேதி அதன் விவரம் வருமாறு:-

* முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர்/இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் எழுத்து தேர்வு- மே.11-ந்தேதி (காலை மற்றும் மதியம்)

* வேதியியலர்/ இளநிலை வேதியியலர் எழுத்து தேர்வு - மே.5-ந்தேதி(காலை மற்றும் மதியம்)

* உதவி புவியியலர்/ புவி வேதியியலர் எழுத்து தேர்வு - மே.5-ந்தேதி(காலை மற்றும் மதியம்)

* அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் துணை கண்காணிப்பாளர் எழுத்து தேர்வு- மே.5-ந்தேதி (காலை மற்றும் மதியம்)

இந்த தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 மாவட்டங்களில் நடைபெறும்.

ஏற்கனவே அறிவித்தப்படியே, கணக்கு அலுவலர்கள் (பிரிவு-3) பணி இடங்களுக்கு எழுத்து தேர்வு மே.5-ந்தேதியும், அரசு குற்றவியல் உதவி வக்கீல்கள் (நிலை-2) முதன்மை எழுத்து தேர்வு மே.11 மற்றும் 12-ந்தேதியும் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story