சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தியது செல்லாது - ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு


சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தியது செல்லாது - ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு
x
தினத்தந்தி 9 April 2019 4:30 AM IST (Updated: 9 April 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து தீர்ப்பு கூறி உள்ளது.

சென்னை, 

சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து தீர்ப்பு கூறி உள்ளது. இந்த திட்டத்துக்காக பொதுமக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டிருந்தால், அவற்றை 8 வாரத்துக்குள் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

8 வழிச்சாலை திட்டம்

மத்திய அரசின், பாரத்மாலா திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழித்தடங்கள் கொண்ட பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

இந்த திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்து, 2018-ம் ஆண்டு மே மாதம் அதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டது.

இதன்படி, வனப்பகுதியில் மட்டும் 120 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாகவும், அந்த நிலங்களில் உள்ள 10 ஆயிரம் பாசன கிணறுகள், 100 குளங்கள், பல லட்ச மரங்கள் அழிக்கப்படும் என்றும் அதுவும் 1.20 லட்சம் மரங்கள் இதுவரை வெட்டப்பட உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த திட்டத்தினால், சேர்வராயன், கல்ராயன் உள்பட 8 மலைகள் உடைக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

ஐகோர்ட்டில் வழக்கு

இதையடுத்து, சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், இந்த திட்டத்துக்கு தடை விதிக்கக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம், விவசாயி பி.வி.கிருஷ்ணமூர்த்தி, பா.ம.க. இளைஞர் அணி தலைவரும், தர்மபுரி எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர்.

இதேபோல், சென்னை- மதுரை பொருளாதார வழித்தடம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டு, அந்த திட்டத்துக்குரிய நிதியை கொண்டு சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை செயல்படுத்த அரசு தீவிரம் காட்டி வருவதாகவும், எனவே, இந்த திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

தடை விதிப்பு

இந்த வழக்குகளை எல்லாம் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்தனர்.

வழக்கு விசாரணையின்போது, இந்த திட்டத்துக்காக நிலத்தை கையகப்படுத்த இடைக்கால தடையை விதித்தும், நிலத்தை கையகப்படுத்துவதை எதிர்த்து போராட்டம் நடத்தும் பொதுமக்களை துன்புறுத்தக்கூடாது என்றும், போராட்டம் நடத்திய பொதுமக்களை போலீசார் தாக்கியது குறித்த விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றியும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந்தேதி உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் நேற்று பிறப்பித்தனர். 117 பக்கங்கள் கொண்ட அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-

நன்மை-தீமை

இந்த வழக்கை பொறுத்தவரை, இந்த திட்டத்தை சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் இல்லாமலேயே தொடரலாமா? இந்த திட்டம் சிலரது நன்மைக்காக உருவாக்கப்பட்டதா? இந்த திட்டத்தில் மறைமுகமாக யாராவது நன்மை அடைய உள்ளனரா? இந்த திட்டத்தினால் வனப்பகுதி, நீர்நிலைகள், வனஉயிரினங்களுக்கு கடுமையாக பாதிப்பு வருமா? என்பது உள்பட 15 விதமாக கேள்விகள் எழுந்துள்ளன.

இதுபோன்ற முக்கியமான, அதிக தொகை செலவு செய்து மேற்கொள்ளப்படும் திட்டங்களை மேற்கொள்வதற்கு முன்பு, அந்த திட்டத்தின் நன்மைகள், தீமைகள் குறித்து முதலில் ஆய்வு செய்து அறிக்கை பெறவேண்டும். அதுகுறித்து பரிசீலிக்க வேண்டும்.

16 ஆண்டுகள்

ஆனால், ரூ.10 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தின் ஆய்வு அறிக்கை வெறும் 60 நாட்களுக்குள் தனியார் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு, அரசிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

இதுபோன்ற நிலை வெளிநாடுகளில் இல்லை. உதாரணத்துக்கு அமெரிக்காவில் 2 தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்க திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் குறித்து 1944-ம் ஆண்டு முதல் 1960-ம் ஆண்டு வரை ஆய்வு செய்து அறிக்கை பெறப்பட்டது.

8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு ஆய்வுப்பணிகளை அமெரிக்கா போல 16 ஆண்டுகள் மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. 8 வழி பசுமைச்சாலை அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.10 ஆயிரம் கோடி செலவில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. அப்படி இருக்கும்போது, இந்த திட்டத்துக்கு வெறும் 60 நாட்களுக்குள் ஆய்வு அறிக்கை பெறப்பட்டு உள்ளது.

சட்டவிரோதம்

மேலும், இந்த திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்துக்கு அருகே உள்ள 7, 8 மரங்களை வெட்ட அனுமதி பெற்று விட்டு, நூற்றுக்கணக் கான மரங்களை சட்டவிரோதமாக வெட்டி அகற்றி உள்ளனர்.

மேலும், அடர்ந்த வனப் பகுதி வழியாக சுமார் 10 கிலோ மீட்டருக்கு இந்த சாலை அமைக்கப்படும்போது, சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து நன்றாக ஆய்வு செய்திருக்க வேண்டும். எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக ஆய்வு செய்து அறிக்கை பெற்று இருக்கவேண்டும்.

ஆனால், இந்த ஆய்வை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. ஒரு தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்த பணி வழங்கி உள்ளது. அந்த தனியார் நிறுவனத்துக்கு ஆய்வுப்பணிகளை வழங்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்ட இந்த நடைமுறைகளை இதற்கு முன்பு நாங்கள் பார்த்ததும் இல்லை. காதால் கேட்டதும் இல்லை. அந்த அளவுக்கு சட்டவிரோதமாக இந்த ஒப்பந்தப்பணி வழங்கப்பட்டு உள்ளது.

முழுமையான ஆய்வு

ஒருவேளை இந்த 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை அமல்படுத்தியே தீரவேண்டும் என்று மத்திய அரசு எண்ணும்போது, அதற்கு முன்பாக வனப்பகுதியில் உள்ள நிலம், அங்குள்ள உயிரினங்கள், தாவரங்கள், நீர்நிலைகள் உள்ளிட்டவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து முறையாக ஆய்வுகள் செய்யவேண்டும். இந்த ஆய்வுகளை அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, முழுமையாக மேற்கொள்ளவேண்டும். அவ்வாறு அந்த பாதிப்புகளை எல்லாம் ஆய்வு செய்யாமல், இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்த முடியாது.

ஆனால், 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தனியார் நிறுவனத்தை நியமித்ததில் மிகப்பெரிய முறைகேடு நடந்து உள்ளது. முதலில், சென்னை- திருச்சி- மதுரை பொருளாதார சாலை அமைக்கும் திட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நியமித்து உள்ளனர். அதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்யாமல், சென்னை- சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டம் குறித்த ஆய்வு பணியை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளனர். இதை ஏற்க முடியாது.

ஆதாரம் இல்லை

அதுவும் திட்டத்துக்காக பொதுமக்களின் நிலத்தை கையகப்படுத்த அறிவிப்பாணையை வெளியிட்ட பின்னர், அந்த திட்டத்துக்குரிய ஆய்வுகளை மேற்கொள்ள தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது. அதாவது, குதிரைக்கு முன்பாக வண்டியை பூட்டியுள்ளது போல உள்ளது.

அதுமட்டுமல்ல, இந்த 8 வழி பசுமைச்சாலை திட்டம், மத்திய அரசின் பாரத்மாலா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது என்பதற்கான ஒரு ஆதாரத்தை கூட, இந்த ஐகோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை.

மேலும் தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் என்ற முக்கிய மலைப்பகுதிகளில் ஏராளமான சட்டவிரோத ஆக்கிரமிப்புகள், அனுமதியில்லாத கட்டிடங்கள் கட்டி, மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதுபோன்ற நிலை பிற மலைப்பகுதிகளில் ஏற்படக்கூடாது என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கவேண்டும். இந்த சூழ்நிலையில், இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பு சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்திருக்கவேண்டும்.

சுற்றுச்சூழல் துறை ஒப்புதல்

வனப்பகுதி வழியாக சாலை செல்லும்போது, வனவிலங்குகள், பறவைகள் சாலையை கடக்கும்போது வாகனங்கள் மோதி பலியாகும். இதற்காக வனப்பகுதிக்குள் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் தடுப்புச்சுவரை கட்ட முடியாது. 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலாளிகளை நியமிக்க முடியாது.

எனவே, இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பு, கண்டிப்பாக சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் பெறப்படவேண்டும். இதற்காக அப்பகுதியில் தீவிரமாக, தெளிவாக களஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு முன்பாக அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் கருத்தை கேட்டறிய வேண்டும். இந்த 8 வழிச்சாலை திட்டத்தினால் பாதிப்பு இல்லை என்று யாராவது கூறினால், அதை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. அதேநேரம், பாதிப்பு இருக்கிறது என்று அப்பாவி மக்கள் கூறுவதைத்தான் நாங்கள் பரிசீலிக்க முடியும்.

அவசர கதியில் அறிக்கை

சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆய்வுகள் எல்லாம் பெற காலதாமதமானால் இந்த 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை 2025-ம் ஆண்டுதான் அமல்படுத்த முடியும் என்று மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இந்த காலதாமதம் ஒன்றும் தவறில்லை. சுற்றுச்சூழல், வன உயிரினங்கள், நீர்நிலைகள், இயற்கை வளங்கள் ஆகியவற்றுக்கு எவ்வளவு பாதிப்பு? என்பதை ஆய்வு செய்து, 2025-ம் ஆண்டு இந்த திட்டத்தை அமல்படுத்துவதால், யாருக்கும் பெரிதாக பாதிப்பு ஏற்பட்டு விடாது.

இந்த திட்டத்துக்கு, முதலில் சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் பெறவேண்டும். அதற்கு முன்பாக பொதுமக்களின் கருத்துகளை கேட்கவேண்டும். ரூ.10 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ளும் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கான கள ஆய்வு அறிக்கை தனியார் நிறுவனத்திடம் இருந்து அவசர கதியில் பெறப்பட்டு உள்ளது. அதனால், அந்த நிறுவனம் வேறு அறிக்கையில் உள்ள வாசகங்களை எல்லாம் தூக்கி, இந்த அறிக்கையில் போட்டு, அறிக்கையை கொடுத்துள்ளது நன்றாக தெரிகிறது.

அறிவிப்பாணை ரத்து

எனவே, தனியார் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட அறிக்கையை ரத்து செய்கிறோம். 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட அறிவிப்பாணையையும் ரத்து செய்கிறோம்.

இந்த வழக்கு விசாரணையின்போது, பொதுமக்களின் நிலங்களை எல்லாம் அரசு நிலங்கள் என்று வருவாய் துறை ஆவணங்களில் மாற்றி விட்டனர் என்று அதிகாரிகள் மீது மனுதாரர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அதுவும், நிலத்தை கையகப்படுத்தும் அறிவிப்பாணையை வெளியிடுவதற்கு முன்பே, இந்த வேலையை அரசு அதிகாரிகள் செய்துவிட்டதாகவும் அவர்கள் கூறினர்.

எனவே, அவ்வாறு அரசு நிலம் என்று அரசு ஆவணங்களில் மாற்றப்பட்ட நிலங்கள் எல்லாம் உரியவர்களிடம் 8 வாரத்துக்குள் ஒப்படைக்கவேண்டும். இதற்காக வருவாய் ஆவணங்களில் எல்லாம் திருத்தம் செய்யவேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

Next Story