தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மீது தி.மு.க. புகார்


தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மீது தி.மு.க. புகார்
x
தினத்தந்தி 9 April 2019 4:45 AM IST (Updated: 9 April 2019 12:42 AM IST)
t-max-icont-min-icon

இந்துக்களுக்கு எதிரான கட்சியாக தி.மு.க.வை சித்தரிக்க முயற்சி செய்யும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. புகார் அளித்துள்ளது.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் தி.மு.க. சட்டப்பிரிவு செயலாளர் கிரிராஜன் அளித்த புகார் மனுக்களில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேர்தல் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தபால் வாக்குகளை பெறுவதற்கான விண்ணப்பங்களையும், தேர்தல் பணி சான்றிதழை பெறுவதற்கான விண்ணப்பங்களையும் போதுமான அளவில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும் வைத்திருக்க வேண்டும்.

ஆனால் இதற்கான தேர்தல் ஆணைய உத்தரவை முழுமையாக பின்பற்றுவதில்லை. இதனால் தகுதி உள்ளவர்களின் ஓட்டுரிமை பறிக்கப்படுகிறது.

கண்காணிக்க வேண்டும்

எனவே இந்த தேர்தலில், தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் எத்தனை பேர்?, அதில் எத்தனை பேர் தபால் வாக்களிக்கவும், எத்தனை பேர் தேர்தல் பணி சான்றிதழையும் பெற தகுதி உள்ளவர்கள்?, அவர்களில் எத்தனை பேருக்கு தபால் ஓட்டுக்களையும், தேர்தல் பணி சான்றிதழையும் பெற விண்ணப்பம், முதல் இரண்டு பயிற்சி காலங்களில் வழங்கப்பட்டுள்ளது? என்ற விவரங்கள் தேவை.

மேலும் 13-ந் தேதியன்று 3-ம் பயிற்சி முகாம் நடக்க உள்ளது. தகுதி உள்ளவர்களுக்கு தேர்தல் பணி சான்றிதழ், மாவட்ட தேர்தல் அதிகாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரால் வழங்கப்பட்டுள்ளதா? என்பதை கண்காணிக்க வேண்டும்.

கட்சிகள் மீது நடவடிக்கை

தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ‘இந்து மதத்தை இழிவுபடுத்தி வாக்கு கேட்கும் தி.மு.க.வுக்கு வாக்களிக்காதீர்’ என்ற ‘எஸ்.எம்.எஸ்.’ அனைத்து செல்போன்களுக்கும் மொத்தமாக அனுப்பப்படுகிறது. அனுப்பியவரின் செல்போன் எண் அதில் இல்லை.

இது சட்டப்படி குற்றமாகும். தி.மு.க.வை இந்துக்களுக்கு எதிரான கட்சியாக சித்தரிக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் முயற்சிக்கின்றன. எனவே சட்டத்துக்கு முரணாக செயல்படும் அந்த கூட்டணி கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story