சென்டிரல் ரெயில்நிலையத்துக்கு பெயர்: அரசிதழ் நகலை வைத்து எம்.ஜி.ஆர். சமாதியில் மரியாதை


சென்டிரல் ரெயில்நிலையத்துக்கு பெயர்: அரசிதழ் நகலை வைத்து எம்.ஜி.ஆர். சமாதியில் மரியாதை
x
தினத்தந்தி 9 April 2019 4:15 AM IST (Updated: 9 April 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

சென்னை சென்டிரல் ரெயில்நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டியது தொடர்பான அரசிதழ் நகலை அவருடைய சமாதியில் வைத்து, சைதை துரைசாமி தலைமையில் உலக எம்.ஜி.ஆர். பேரவையினர் நேற்று மரியாதை செலுத்தினர்.

சென்னை,

தமிழக அரசு, உலக எம்.ஜி.ஆர். பேரவையின் கோரிக்கையை ஏற்று சென்னை சென்டிரல் ரெயில்நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் அறிவித்தார். இந்தநிலையில் சென்டிரல் ரெயில்நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்டி கடந்த 5-ந்தேதி அரசிதழ் வெளியானது.

இதனை வரவேற்கும் விதமாக உலக எம்.ஜி.ஆர். பேரவை சார்பில் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி நேற்று பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டியது தொடர்பான அரசிதழ் நகலை பெரிய பதாகை மூலம் அவருடைய சமாதியில் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

மலர்தூவி மரியாதை

சைதை துரைசாமி தலைமையில் உலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகளான முன்னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன், ஐசரி கணேஷ், நடிகை லதா, முருக பத்மநாபன், எம்.ஜி.ஆரின் உதவியாளர் மகாலிங்கம், ஆடை வடிவமைப்பாளர் முத்து, ஓம்பொடி பிரசாத், ராமன் உள்பட ஏராளமானோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

எம்.ஜி.ஆர். சமாதிக்கு நேற்று காலை வந்திருந்த பார்வையாளர்களுக்கு சைதை துரைசாமி இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அமைந்துள்ள ஜெயலலிதா சமாதியிலும் அனைவரும் மரியாதை செலுத்தினர்.

பிரதமருக்கு நன்றி

இதுதொடர்பாக சைதை துரைசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை சென்டிரல் ரெயில்நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் என்று அறிவித்த ஒரு மாத காலத்திற்குள் அதற்கான அரசாணை வெளியிட்டு நடைமுறைப்படுத்தியதற்காக பிரதமருக்கும், மத்திய அரசுக்கும், தமிழக முதல்-அமைச்சருக்கும், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கும் உலக எம்.ஜி.ஆர். பேரவை நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் பல்லாவரம் வேல்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற உலக எம்.ஜி.ஆர். பேரவையின் பிரதிநிதிகள் மாநாட்டில், சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி, அந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் அளித்தோம். மாநாட்டில் பேசிய அவர், இந்த தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி, உடனடி நடவடிக்கை மேற்கொள்வேன் என்று உறுதியளித்தார்.

டிக்கெட்டில் எம்.ஜி.ஆர். பெயர்

இந்நிலையில் கடந்த மாதம் 6-ந்தேதி சென்னைக்கு வருகை தந்த பிரதமர் மோடி, இதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்காக என் நண்பர் மூலம் பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டேன். அதன் விளைவாக பிரதமர் மோடி வெளியிட்ட சில அறிவிப்புகளில் முக்கிய அறிவிப்பாக சென்னை சென்டிரல் ரெயில்நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் என்ற அறிவிப்பு இடம் பெற்றது.

இதைத்தொடர்ந்து தமிழக அரசு உரிய அரசாணை வெளியிட்டதுடன் மத்திய ரெயில்வே நிர்வாகமும் உடனடியாக எம்.ஜி.ஆர். பெயருடன் கூடிய பயணச்சீட்டுகளை அச்சடித்து வினியோகிக்க தொடங்கிவிட்டது. எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்திலும் அறிவிப்பாளர்கள் எம்.ஜி.ஆர். பெயரை சொல்லத் தொடங்கிவிட்டனர்.

இந்திய வரலாற்றில்...

இந்திய வரலாற்றில் திரையுலகிலும் அரசியல் பொது வாழ்விலும் இருந்த எவரும் எம்.ஜி.ஆர் போன்று சிறப்பு பெற்றவர்கள் இல்லை. சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு திரையுலகின் பிரதிநிதி, முதல்-அமைச்சர், கொடைவள்ளலாக திகழ்ந்த எம்.ஜி.ஆரின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வண்ணம் சென்டிரல் ரெயில்நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டி நடைமுறைக்கு கொண்டு வந்ததற்காக பிரதமர் நரேந்திரமோடிக்கும், மத்திய ரெயில்வேத்துறை அமைச்சகத்துக்கும், தமிழக முதல்-அமைச்சருக்கும், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் அனைவருக்கும் உலகெங்கும் வாழ்கின்ற எம்.ஜி.ஆர். பக்தர்களின் சார்பாக உலக எம்.ஜி.ஆர். பேரவை நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.

கோயம்பேடு பஸ்நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர், சென்டிரல் ரெயில்நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர். இப்படிப்பட்ட பெருமை, சிறப்பு எம்.ஜி.ஆரை தவிர நாட்டில் வேறு யாருக்கும் கிடைக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story