ரூ.55 லட்சம் மோசடி ரெயில்வே காண்டிராக்டர் மனைவியுடன் கைது
சென்னையில் ரூ.55 லட்சம் மோசடி புகாரில் ரெயில்வே காண்டிராக்டர் அவரது மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னை திருவல்லிக்கேணி கோகுலம் காலனியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 52). மண்எண்ணெய் வியாபாரியான இவருக்கு சொந்தமாக 2 மாடி வீடு உள்ளது. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
போலி பத்திரம்
‘எனது வீட்டை அடமானம் வைத்து ரூ.7 லட்சம் தரும்படி எனது நண்பர் ஆலப்பாக்கத்தை சேர்ந்த பிரேம்குமார் (39) என்பவர் மூலம் குரோம்பேட்டையில் வசிக்கும் ரெயில்வே காண்டிராக்டர் ரவிக்குமார் (51) என்பவரை அணுகினேன். வளசரவாக்கத்தில் உள்ள வங்கியில் எனது வீட்டை அடமானம் வைத்து ரூ.7 லட்சம் கடன் வாங்கி தந்தனர். அதற்காக சில ஆவணங்களில் என்னிடம் கையெழுத்து வாங்கினார்கள்.
அந்த ஆவணங்கள் மூலம் என்னுடைய வீட்டை ரவிக்குமாருக்கு விற்பனை செய்ததாக போலி பத்திரம் தயார் செய்து, அந்த பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்து ரூ.62 லட்சம் கடன் பெற்று உள்ளனர். கடனுக்கு வட்டியும், அசலும் கட்டவில்லை. வங்கி அதிகாரிகள் எனது வீட்டை ‘ஜப்தி’ செய்ய வந்தபோது தான் இந்த மோசடி எனக்கு தெரியவந்தது.
ரூ.55 லட்சம் மோசடி
வங்கியில் வாங்கிய ரூ.62 லட்சத்தில் தான் எனக்கு ரூ.7 லட்சம் கொடுத்துள்ளனர். பிரேம்குமார் ரூ.5 லட்சத்தை எடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.50 லட்சத்தை ரவிக்குமார் தனது சொந்த தேவைக்காக உபயோகப்படுத்தி உள்ளார். எனக்கு ரூ.7 லட்சம் கொடுத்தது போக பிரேம்குமாரும், ரவிக்குமாரும் சேர்ந்து ரூ.55 லட்சத்தை சுருட்டி இருக்கிறார்கள். இதுகுறித்து கேட்டபோது கொலைமிரட்டல் விடுத்தனர்.
இந்த மோசடியில் ரவிக்குமாரின் மனைவி ரேணுகாதேவிக்கும் (48) தொடர்பு உள்ளது. என்னை ஏமாற்றிய 3 பேர் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கைது
இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனர் அன்பு, துணை கமிஷனர் மல்லிகா, உதவி கமிஷனர் தனவேல் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுமதி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பிரேம்குமார், ரவிக்குமார் மற்றும் ரவிக்குமாரின் மனைவி ரேணுகாதேவி ஆகியோரை நேற்று கைது செய்தனர். ரவிக்குமாரின் வங்கி கணக்கில் இருந்த ரூ.5 லட்சத்தை முடக்கி வைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story