26-ந்தேதி நேரில் ஆஜராகவில்லை என்றால் வருவாய்த்துறை முதன்மை செயலாளர் மீது கடும் நடவடிக்கை ஐகோர்ட்டு எச்சரிக்கை
வருவாய்த்துறை முதன்மை செயலாளர், திருவள்ளூர் கலெக்டர் வருகிற 26-ந்தேதி நேரில் ஆஜராகவில்லை என்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை,
நீர்நிலைகள், சாலைகள், அரசு புறம்போக்கு நிலம் ஆகியவற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள விதிமீறல் கட்டிடங்களை ஒழுங்குப்படுத்த பலர் விண்ணப்பம் செய்தனர். அந்த விண்ணப்பங்கள் நெடுங்காலமாக பரிசீலிக்காமல் அதிகாரிகள் நிலுவையில் வைத்துள்ளனர்.
அதிகாரிகளின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.வேணுகோபால், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர், தமிழக வருவாய்த்துறை முதன்மை செயலாளர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், பூந்தமல்லி தாசில்தார் ஆகியோரை நேரில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.
மேலும், அந்த உத்தரவில், ‘ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் உள்ள அதிகாரிகள் குறித்து ஐகோர்ட்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். அந்த அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.
எச்சரிக்கை
இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வருவாய்த் துறை முதன்மை செயலாளர் பணி நிமித்தமாக டெல்லி சென்றுள்ளதாகவும், திருவள்ளூர் கலெக்டர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், பூந்தமல்லி தாசில்தார் மட்டும் ஆஜராகி உள்ளதாக அரசு தரப்பு வக்கீல் கூறினார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ‘ஐகோர்ட்டு உத்தரவிட்டால், அதிகாரிகள் ஆஜராக வேண்டும். இந்த வழக்கை வருகிற 26-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அன்று அதிகாரிகள் ஆஜராகவில்லை என்றால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்று எச்சரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story