சிலை முறைகேடு வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது: பொன் மாணிக்கவேல் மீது மனித உரிமை மீறல் புகார் டி.ஜி.பி. பதில் அளிக்க உத்தரவு
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள சோமஸ்கந்தர் ஐம்பொன் சிலை சேதம் அடைந்ததால் புதிய சிலை செய்வதற்கு பொதுமக்களிடம் இருந்து நன்கொடை பெறப்பட்டது.
சென்னை,
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள சோமஸ்கந்தர் ஐம்பொன் சிலை சேதம் அடைந்ததால் புதிய சிலை செய்வதற்கு பொதுமக்களிடம் இருந்து நன்கொடை பெறப்பட்டது. அவ்வாறு பெறப்பட்ட 8.7 கிலோ தங்கத்தில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான வீரசண்முகமணியை கடந்த மாதம் 15-ந் தேதி கைது செய்தனர். ஐகோர்ட்டு மூலம் அவர் ஜாமீன் பெற்றார்.
இந்த நிலையில் வீரசண்முகமணி மாநில மனித உரிமை ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “விசாரணையின் போது தொடர் குற்ற செயலில் ஈடுபடுபவர்களிடம் விசாரணை நடத்துவது போன்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் என்னை நடத்தினார். சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் அறிவுறுத்தலின் பேரிலே இன்ஸ்பெக்டர் அதுபோன்று நடந்து கொண்டார். எனது கைது குறித்து குடும்பத்தினரிடம் தெரிவிக்க அனுமதிக்கவில்லை. எனக்கு உடல்நிலை சரியில்லாத விவரத்தை கூறியபோதும் அதை கண்டுகொள்ளவில்லை. ஒருவரை கைது செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய அடிப்படை சட்ட விதிகளை பின்பற்றவில்லை. விசாரணையின் போது பல்வேறு மனித உரிமை மீறல்கள் நடந்தன. எனவே, சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல், இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தண்டிக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி துரை ஜெயச்சந்திரன், ஐ.ஏ.எஸ். அதிகாரியை கைது செய்யும்போது என்னென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு, தேசிய, மாநில மனித உரிமை ஆணையத்தின் விதிமுறைகள் இந்த வழக்கில் முறையாக பின்பற்றப்பட்டதா? என்பது குறித்தும், மனுதாரர் தனது புகாரில் தெரிவித்து இருப்பது போன்று அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் விசாரணையின் போது சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் நடந்துகொண்டார்களா? என்பது குறித்தும் தமிழக போலீஸ் டி.ஜி.பி., சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் ஆகியோர் 4 வாரத்துக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story