தமிமுன் அன்சாரி, தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் “தகுதிநீக்கம் செய்தால் எம்.எல்.ஏ. பதவியை தியாகம் செய்ய தயார்” என்று அறிவிப்பு
‘இரட்டை இலை’ சின்னத்தில் வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி, தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
சென்னை,
‘இரட்டை இலை’ சின்னத்தில் வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி, தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதனால் தன்னை தகுதிநீக்கம் செய்தால் எம்.எல்.ஏ. பதவியை தியாகம் செய்ய தயார் என்று அவர் கூறியுள்ளார்.
தமிமுன் அன்சாரி பேட்டி
இதுதொடர்பாக மனிதநேய ஜனநாயக கட்சி தலைவரும், நாகப்பட்டினம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-
நடைபெறுகிற நாடாளுமன்ற தேர்தல் சர்வாதிகாரத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையிலான போட்டி களமாக மாறி உள்ளது. மீண்டும் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்துவிட்டால் அதிபர் பாணி முறையில் ஆட்சி நடக்கும் என்ற அச்சம் இருக்கிறது.
எனவே நரேந்திர மோடி ஆட்சி அகற்றப்பட்டு ராகுல்காந்தி தலைமையில் கூட்டணி ஆட்சி அமையவேண்டும் என்ற அடிப்படையில் தான் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.
நிபந்தனையற்ற ஆதரவு
நாங்கள் கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கீகரிக்கப்பட்டு, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நான், தனியரசு, கருணாஸ் ஆகியோர் பிரச்சினைகள் அடிப்படையில் அ.தி.மு.க. அரசை விமர்சித்து வந்திருக்கிறோம்.
தமிழகத்தில் நரேந்திர மோடிக்கு எதிரான வெறுப்பு அலை வீசிக் கொண்டிருக்கிறது. பா.ஜ.க. அரசு தமிழக மக்களை புறக்கணிக்கிறது என்ற கருத்தை சொல்லி, பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவேண்டாம் என்று அ.தி.மு.க. தலைமையை நாங்கள் 3 பேரும் தொடர்ந்து வலியுறுத்தினோம். ஆனால் அவர்கள் அதனை ஏற்கவில்லை. எனவே தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி நிபந்தனையற்ற ஆதரவை அளித்துள்ளது.
தியாகம்
சட்டமன்றத்தை பொறுத்தவரை பிரச்சினைகளின் அடிப்படையில் தான் எங்களுடைய ஆதரவு இருக்கும். நாங்கள் எடுத்திருக்கக்கூடிய கொள்கை முடிவின் காரணமாக, சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்தால் நாட்டின் நலனை கருத்தில்கொண்டு முடிவு எடுப்போம். தகுதிநீக்கம் செய்தால் எம்.எல்.ஏ. பதவியை தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறேன்.
பா.ஜ.க. போட்டியிடும் 5 தொகுதிகளில் அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையும், மற்ற தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் தனியரசு எடுத்து இருக்கிறார். பா.ஜ.க. போட்டியிடும் 5 தொகுதிகளில் எதிர்த்துவிட்டு, மற்ற தொகுதியில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் கருணாஸ் உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story