பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: குண்டர் சட்டத்தில் கைதான 4 பேரும் அறிவுரை கழகத்தில் ஆஜர் தனித்தனியே விளக்கம் அளித்தனர்


பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: குண்டர் சட்டத்தில் கைதான 4 பேரும் அறிவுரை கழகத்தில் ஆஜர் தனித்தனியே விளக்கம் அளித்தனர்
x
தினத்தந்தி 11 April 2019 2:45 AM IST (Updated: 11 April 2019 1:46 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேரும் சென்னை அறிவுரை கழகத்தில் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

சென்னை, 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவம் தமிழகத்தையே கொந்தளிக்க வைத்தது. இதுதொடர்பான வீடியோ காட் சிகள் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை ஆசைவார்த்தைகள் கூறி காதல் வலையில் வீழ்த்தி பின்னர் பாலியல் பலாத்காரம் செய்ததாக பொள்ளாச்சியை அடுத்த சின்னப்பம்பாளையத்தை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது 27), அவரது கூட்டாளிகள் வசந்தகுமார் (24), சதீஷ் (29) சபரிராஜன் (25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அறிவுரை கழகத்தில் ஆஜர்

இந்தநிலையில் குற்றவாளிகள் 4 பேருக்கும் சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் ஆஜராக ‘சம்மன்’ அனுப்பப்பட்டது. அதன்படி கோவை சிறையில் இருந்து போலீஸ் வாகனத்தில் திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், சபரிராஜன் ஆகிய 4 பேரும் பாதுகாப்புடன் பிற்பகல் 3 மணியளவில் அறிவுரை கழகத்துக்கு அழைத்துவரப்பட்டனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பின்னர் அவர்கள், அறிவுரை கழக தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ராமன், உறுப்பினர்கள் ரகுபதி, மாசிலாமணி ஆகியோர் முன்னிலையில் தனித்தனியே ஆஜரானார்கள். அவர்களுடன் தலா ஒரு உறவினர்கள் உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

அனுமதி மறுப்பு

அங்கு குண்டர் சட்டம் பாய்ந்தது குறித்து தலைவர் மற்றும் உறுப்பினர்கள் விளக்கம் அளித்தனர். குற்றவாளிகள் தரப்பு விளக்கமும் பதிவு செய்யப்பட்டது. ஒவ்வொருவரிடமும் தலா 5 நிமிடங்கள் விசாரணை நடந்தது. விசாரணை முடிந்ததை தொடர்ந்து 4 பேரும் போலீஸ் வாகனத்தில் மீண்டும் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

முன்னதாக குற்றவாளிகளான திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், சபரிராஜன் ஆகியோரிடம் பேசுவதற்காக அவர்களது உறவினர்கள் கலெக்டர் வளாகத்தில் சுற்றி திரிந்தனர். ஆனால் உறவினர்கள் பேசுவதற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். திருநாவுக்கரசு அருகில் நின்றிருந்த அவரது தாய் லதா கண்ணீருடன் சிலமுறை மகனை தொட்டு பேசினார். ஆனால் அவரை போலீசார் எச்சரித்தனர்.

விசாரணையின்போது குற்றவாளிகளின் உறவினர்கள் முகத்தை மூடிய படியே ஆஜரானார்கள்.
1 More update

Next Story