வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்லக்கூடாது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி


வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்லக்கூடாது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி
x
தினத்தந்தி 10 April 2019 11:30 PM GMT (Updated: 12 April 2019 12:55 AM GMT)

வாக்குச்சாவடிக்குள் செல்போனை கொண்டு செல்லக்கூடாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்தார்.

சென்னை, 

சென்னை தலைமைச் செயலகத்தில் சத்யபிரத சாகு அளித்த போட்டி வருமாறு:-

தமிழகத்தில் 5 கோடியே 98 லட்சத்து 69 ஆயிரத்து 758 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 2 கோடியே 95 லட்சத்து 94 ஆயிரத்து 923 பேர் ஆண்கள், 3 கோடியே 2 லட்சத்து 69 ஆயிரத்து 45 பேர் பெண்கள். 5 ஆயிரத்து 790 பேர் மூன்றாம் பாலினத்தவர். கூடுதலாக சேர்க்கப்பட்ட புது வாக்காளர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இன்னும் ஒரு வாரத்தில் வழங்கப்பட்டு விடும்.

கைப்பற்றப்பட்ட பணம்

இந்தத் தேர்தலில் நடத்தை விதிமுறைகளை மிகவும் கடுமையாக செயல்படுத்தி வருகிறோம். இதுவரை தமிழகத்தில் ரூ.127.66 கோடி பணம் பிடிபட்டுள்ளது. இதில் வருமான வரித்துறையினர் மட்டுமே ரூ.37.78 கோடி தொகையை கைப்பற்றினர்.

உரிய ஆவணங்களை காட்டியதால் ரூ.62.24 கோடி தொகை திரும்ப கொடுக்கப்பட்டுவிட்டது. 10-ந் தேதி மட்டும் ரூ.3.48 கோடி பணம் கைப்பற்றப்பட்டது.

989 கிலோ தங்கம், 594 கிலோ வெள்ளி உள்பட ரூ.284 கோடி மதிப்புள்ள விலை மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன. தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக 4,185 புகார்கள் வந்தன. அவற்றில் 93 எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பதற்றமான வாக்குச்சாவடிகள்

தமிழகத்தில் 67 ஆயிரத்து 720 வாக்குச்சாவடிகள் உள்ளன. பெண்கள் மட்டுமே பணியாற்றக் கூடிய வாக்குச்சாவடியை ஒரு மாவட்டத்துக்கு ஒன்று என்ற விகிதத்தில் நியமிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் கூறியிருக்கிறேன். வசதி இருந்தால் பெண்கள் மட்டுமே பணியாற்றும் கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைத்துத் தரப்படும்.

தமிழகத்தில் 7,780 பதற்றத்துக்குரிய மற்றும் மிகவும் பதற்றத்துக்குரிய வாக்குச்சாவடிகள் உள்ளன. அங்கு கூடுதல் துணை ராணுவ வீரர்கள், நுண் பார்வையாளர்கள் நியமனம், வெப் கேரமா ஒளிபரப்பு, வீடியோ படம் பிடித்தல் போன்ற அம்சங்கள் இடம் பெற்றிருக்கும்.

சிறப்பு ஆசிரியர்

தலைமைத் தேர்தல் அதிகாரி அளிக்கும் பேட்டிகளை காது கேளாதோரையும் புரிந்துகொள்ளச் செய்யவேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. எனவே சுரேஷ் என்ற ஆசிரியரை வரவழைத்துள்ளோம்.

அவர் சாந்தோமில் உள்ள சி.எஸ்.ஐ. காதுகேளாதோர் பள்ளியில் சிறப்பு ஆசிரியராக பணியாற்றுகிறார். அவர் சைகை மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கிறார்.

செல்போனுக்கு தடை

வாக்குச்சாவடியில் வரிசையைப் பற்றி அறிந்துகொள்ள இணையதளத்தில் கியூ மேப், ரூட் மேப் வசதி செய்துதரப்பட்டுள்ளது. அதைப் பார்த்து வரிசையின் நிலையை அறிந்துகொள்ளலாம்.

உத்தரபிரதேசம் தேர்தலில் வாக்காளர்கள் செல்பி எடுப்பதாக அதற்கென்று தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி இங்கு வாக்குச்சாவடியின் 200 மீட்டர் தூரத்துக்குள் அதுபோல் எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. வாக்குச்சாவடிக்குள் செல்போனை கொண்டு செல்லக்கூடாது.

வேலூரில் தேர்தல் நிறுத்தமா?

வேலூரில் நடந்த சோதனையை அடுத்து எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுதொடர்பாக வேலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி, வருமான வரித்துறையினர் ஆகியோரிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டுள்ளது. அவற்றையெல்லாம் உள்ளடக்கி தேர்தல் ஆணையத்துக்கு ஒருங்கிணைந்த அறிக்கையை அனுப்ப உள்ளேன்.

வேலூரில் நடந்த சோதனையில் மாவட்ட தேர்தல் அதிகாரியின் சார்பில் பறக்கும்படை, கண்காணிப்புக் குழு ஆகியவை வருமான வரித்துறையுடன் இருந்தன. எனவே அதில் எப்.ஐ.ஆர். பதிவு என்பது போன்ற நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்கிறது. உதவி தேர்தல் செலவினப் பார்வையாளர் அதில் புகார் கொடுத்திருந்தார்.

வேலூரில் நடந்த சோதனையை அடுத்து அந்த நாடாளுமன்றத் தேர்தல் நிறுத்தப்படுமா என்று கேட்டால், அதை இந்திய தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும். ஒரு இடத்தில் ஓட்டுக்காக, பெட்ரோல் போடுவதற்கு கூப்பன் வழங்கியுள்ளனர். உடனடியாக அதை கைப்பற்றிவிட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story