4 நாட்கள் கவனமாக உழைத்தால் 40 தொகுதிகளிலும் வெற்றி தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம்


4 நாட்கள் கவனமாக உழைத்தால் 40 தொகுதிகளிலும் வெற்றி தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம்
x
தினத்தந்தி 13 April 2019 1:13 AM IST (Updated: 13 April 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

4 நாட்கள் கவனமாக உழைத்தால் 40 தொகுதிகளிலும் வெற்றி நமக்கே என்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி, 18 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவும் வரும் 18-ந்தேதி நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை போலவே சட்டசபை தேர்தலும் மிகவும் முக்கியமானதாகும். இந்த இரு தேர்தல்களுக்குமான பிரசாரம் நிறைவடைய இன்னும் 4 நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. அடுத்து வரும் 4 நாட்களுக்கான பணிகள் நமக்கு முக்கியமானவை.

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., த.மா.கா., புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம், புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தொண்டர்களும், தேர்தலில் போட்டியிடாமல் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள 25-க்கும் மேற்பட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் ஆற்றி வரும் களப்பணிகள் மிகவும் அற்புதமானவை. எந்தத் தொகுதியில் எந்த கட்சியின் வேட்பாளர் போட்டியிடுகிறார் என்ற வினாவையே எழுப்பாமல் அனைத்து இடங்களிலும் தங்கள் சொந்த கட்சியின் வேட்பாளரே போட்டியிடுவதை போன்று அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் பணி பாராட்டத்தக்கதாகும்.

வெற்றி இலக்கை நோக்கி...

அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பதை நானே நேரில் பார்த்து அறிந்தேன். களநிலவரம் தொடர்பாக மற்ற தொகுதிகளில் இருந்து வரும் தகவல்களும் மிகவும் உற்சாகம் அளிப்பவையாகவே உள்ளன. 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டசபை தொகுதிகளிலும் வெற்றி என்ற இலக்கை நோக்கி நாம் விரைவாக முன்னேறுகிறோம்.

ஆனாலும், அதிக நம்பிக்கை அலட்சியமாக மாறிவிடக்கூடாது. பயிரை சாகுபடி செய்யும் காலத்தை விட அறுவடை செய்யும் காலத்தில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதன்படி அடுத்த 4 நாட்களுக்கு பா.ம.க. உள்பட அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகவும் விழிப்புடனும், கடமை உணர்வுடனும் தேர்தல் பணியாற்ற வேண்டும்.

4 நாட்கள் உழைக்க வேண்டும்

தி.மு.க. கூட்டணி கட்சியினரின் வன்முறைகள், அவர்கள் அணி வெற்றி பெற்றால் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போகும் சூழல், வணிகர்கள் தொடங்கி அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படும் அபாயம், அப்பாவி மக்களின் நிலங்கள் உள்ளிட்ட உடமைகள் பறிக்கப்படும் ஆபத்து ஆகியவற்றை மக்களுக்கு புரியும்படி எடுத்துரைக்க வேண்டும்.

தேர்தல் களமும், களச்சூழலும் நமக்கு ஆதரவாக உள்ளன. மக்களும் நமக்கு வாக்களிக்க விருப்பமாக உள்ளனர். அதை உணர்ந்து அடுத்த 4 நாட்களுக்கு கடுமையாகவும், கவனமாகவும் உழைத்தால் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டசபை தொகுதிகளிலும் நமக்கே வெற்றி. இது உறுதி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story