தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி மீது தமிழக மக்கள் துல்லிய தாக்குதல் நடத்துவார்கள் மத்திய மந்திரி பியூஸ் கோயல் பேட்டி


தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி மீது தமிழக மக்கள் துல்லிய தாக்குதல் நடத்துவார்கள் மத்திய மந்திரி பியூஸ் கோயல் பேட்டி
x
தினத்தந்தி 12 April 2019 11:00 PM GMT (Updated: 12 April 2019 7:54 PM GMT)

தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி மீது தமிழக மக்கள் துல்லிய தாக்குதல் நடத்துவார்கள் என்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் கூறினார்.

சென்னை, 

சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜனதா அலுவலகமான கமலாலயத்தில் பா.ஜனதா கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய ரெயில்வே மந்திரியுமான பியூஸ் கோயல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின் போது, தற்போது எங்கள் கூட்டணியில் உள்ள அ.தி.மு.க. கட்சி 37 தொகுதிகளையும், பா.ம.க. ஒரு இடத்தையும், என்.ஆர்.காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. இந்த முறை இந்த கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்துள்ளோம். தமிழக மக்கள் மீண்டும் பிரதமர் மோடி ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனவே 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றிபெறும்.

கோதாவரி-காவிரி இணைப்பு

பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் நதிநீர் இணைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வாஜ்பாய் ஆட்சியின் போது நதிகள் இணைப்புக்கான திட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதற்கு அடுத்து வந்த காங்கிரஸ் கட்சி 10 ஆண்டுகள் அந்த திட்டத்தை கிடப்பில் போட்டது.

தற்போது, மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்தபிறகு, இந்த திட்டத்தை தொடங்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலில் கோதாவரி- காவிரி நதிகள் இணைக்கப்படும். எங்களது நதிகள் இணைப்பு திட்டத்தை வரவேற்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

கோவை, மும்பை தாக்குதல்

கோவை, மும்பை தாக்குதல்களின் போது காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆனால், பாலகோட் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி துல்லிய தாக்குதல் நடத்தினார்.

காங்கிரஸ் கட்சி நடுத்தர மக்கள் மீது அதிக வரி விதிக்க திட்டமிட்டுள்ளது. ஆனால், மோடி அரசு 5 லட்சம் ரூபாய் வரை வருமானவரி விலக்கு அளித்துள்ளது. காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களில் பலர் ஜெயிலில் இருந்து பெயிலில் வந்து தான் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளிவந்தவர் தான்.

ராமர் கோவில்

ஏழைகளின் வறுமை மீது துல்லிய தாக்குதல் நடத்தப்படும் என்கிறார் ராகுல்காந்தி. 3 தலைமுறையாக அவரது குடும்பத்தினர் கூறிவரும் பொய்களை மக்கள் கவனித்து வருகின்றனர். எனவே தமிழக மக்கள் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி மீது துல்லிய தாக்குதல் நடத்துவார்கள்.

வேலைவாய்ப்பு உருவாக்கவில்லை என்று ராகுல்காந்தி கூறுகிறார். சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். தொழிற்சாலையில் ‘ரெயில்-18’ என்ற பெயரில் 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால், ராகுல்காந்தி இங்குள்ள என்ஜினீயர்களை அவமதிக்கும் வகையில், ரெயில்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்கிறார்.

ரபேல் ஊழல் குறித்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்கிறோம். அந்த வழக்கை சட்டரீதியாக சந்திப்போம். ராமர் கோவில் உறுதியாக கட்டப்படும். ராமர் கோவில் கட்டுவதற்கான சட்ட நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

‘நீட்’ தேர்வு

காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினரின் மருத்துவ கல்லூரிகளில் கல்வி கட்டண கொள்ளைக்காகவே ‘நீட்’ தேர்வு ரத்து செய்வதாக அறிவிக்கிறார்கள். ஆனால் நாங்கள் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யமாட்டோம். ‘நீட்’ தேர்வு தமிழில் நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க. கோரிக்கை வைத்தது. அதனை ஏற்றுக்கொண்டு உள்ளோம். ‘நீட்’ தேர்வு ரத்து குறித்து அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது பற்றி எனக்கு தெரியாது. அப்படி கூறியிருந்தால், அ.தி.மு.க.வை சமாதானம் செய்வோம்.

7 பேர் விடுதலை குறித்து கவர்னர் தான் முடிவு செய்வார். பா.ஜனதாவுக்கு எதிரான முகநூல், டுவிட்டர் பதிவுகளை தடைசெய்வது மத்திய அரசு அல்ல. அது குறித்து முகநூல், டுவிட்டர் நிறுவனங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்திடம் தான் கேட்க வேண்டும். அதே போன்று, தேர்தல் நேரத்தில் நடைபெறும் தேர்தல் பறக்கும்படை சோதனை மற்றும் வருமானவரி சோதனைகளுக்கும் மத்திய அரசு பொறுப்பு அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, தமிழக பா.ஜனதா தேர்தல் இணை பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் தமிழக பா.ஜனதா நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story