குரூப்-1 தேர்வு எழுதிய ரிசர்வ் வங்கி ஊழியருக்கு போலீஸ் அதிகாரி பதவி ஐகோர்ட்டு உத்தரவு
குரூப்-1 தேர்வு எழுதிய ரிசர்வ் வங்கி ஊழியருக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பதவிக்கான பணி நியமனத்தை ஒரு வாரத்தில் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1 தேர்வில் பங்கேற்று துணை போலீஸ் சூப்பிரண்டாக தேர்வு செய்யப்பட்டவர் மனோஜ்குமார். ஆனால் ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் செய்தபோது, ரிசர்வ் வங்கியில் தான் பணியாற்றியதை தெரிவிக்காமல் மறைத்துவிட்டதாக கூறி இவரது தேர்வை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் நிறுத்திவைத்தது.
இதை எதிர்த்து மனோஜ்குமார் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நீங்கள் அரசு ஊழியரா? என்ற கேள்விக்கு இல்லை என்று மனுதாரர் பதில் அளித்துள்ளதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டார்.
அரசு ஊழியர் இல்லை
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனோஜ்குமார் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மனுதாரர் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாநிலத்தில் 8-வது இடம் வந்தவர். மருத்துவ படிப்பில் இடம் கிடைத்தும், அதில் சேராமல் என்ஜினீயரிங் படிப்பை முடித்து ரிசர்வ் வங்கி பணியில் சேர்ந்துள்ளார்.
ரிசர்வ் வங்கி என்பது இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் பிரிவு 12-ன் கீழ் செயல்படும் ஒரு தனி அமைப்பாகும். ரிசர்வ் வங்கியில் பணியாற்றுபவர்கள் அரசு ஊழியர்கள் வரையறைக்குள் வரமாட்டார்கள். இதை விண்ணப்பத்தில் மனுதாரர் சரியாக குறிப்பிட்டுள்ளார். அவர் குரூப்-1 தேர்வில் பங்கேற்பதற்கு தடை எதுவும் இல்லை என்று உயர் அதிகாரியின் தடையில்லா சான்றிதழ் பெற்றுள்ளார். எனவே, தனி நீதிபதி உத்தரவை ரத்துசெய்கிறோம். மனுதாரருக்கு ஒரு வாரத்துக்குள் பணி நியமனம் வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story