சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி கடத்தல் தங்கம் சிக்கியது


சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி கடத்தல் தங்கம் சிக்கியது
x

சென்னை விமான நிலையத்தில் மலேசியா, கொழும்பு, துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.1 கோடியே 4 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 11 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.

ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் அவர்கள், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலையில் கொழும்பு, துபாய், மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில், சுற்றுலா விசாவில் சென்றுவிட்டு திரும்பிய ராமநாதபுரத்தை சேர்ந்த அஜ்மீர்(வயது 24), உசேனுதீன் (36), அசேன்கான் (23), முகமது ஷாருக்கான் (20), சென்னையை சேர்ந்த இப்ராகிம் (40), சாதிக்(43), அப்துல்வகாப்(30), ஆசிக் ராஜா(27), ஈரோட்டை சேர்ந்த ஷேக்(35), சிவகங்கையை சேர்ந்த விக்னேஷ் (28), டெல்லியை சேர்ந்த ஷாஜகான் (50) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

ரூ.1 கோடியே 4 லட்சம்

ஆனால் 11 பேரும் அதிகாரிகளிடம் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை. இதையடுத்து அனைவரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

அதில் 11 பேரும், உள்ளாடைக்குள் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தி வந்தது தெரிந்தது. அவர்களிடம் இருந்து ரூ.1கோடியே 4 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 150 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக பிடிபட்ட 11 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்ற னர்.

Next Story