சுட்டெரிக்கும் வெயிலில் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் தமிழகத்தில் உச்சக்கட்ட பிரசாரம்


சுட்டெரிக்கும் வெயிலில் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் தமிழகத்தில் உச்சக்கட்ட பிரசாரம்
x
தினத்தந்தி 14 April 2019 12:15 AM GMT (Updated: 13 April 2019 7:00 PM GMT)

சுட்டெரிக்கும் வெயிலில் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று ஓட்டு கேட்கிறார்கள்.

சென்னை, 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற 18-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

845 பேர் போட்டி

இந்த தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக இருக்கும் 22 சட்டசபை தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் காலியாக இருக்கும் ஒரு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

(தமிழகத்தில் காலியாக உள்ள மேலும் 4 சட்டசபை தொகுதிகளுக்கு மே 19-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது)

இந்த தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன. அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் தங்களது தலைமை யில் அணிகளை உருவாக்கி தேர்தலை சந்திக்கின்றன.

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 845 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிகபட்சமாக தென் சென்னை தொகுதியில் 40 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரியில் 10 பேரும் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர் இறுதி பட்டியல் கடந்த மாதம் (மார்ச்) 29-ந் தேதி வெளியானதை தொடர்ந்து, தேர்தல் பிரசாரம் சூடுபிடித்தது.

உச்சக்கட்ட பிரசாரம்

தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் மட்டுமல்லாமல், தேசிய கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து மும்முரமாக வாக்கு சேகரித்து வருகிறார்கள். கட்சிகளுக்கு ஆதரவாக நடிகர்-நடிகைகளும் மும்முரமாக பிரசாரம் செய்து வருகிறார்கள்.

தேர்தல் விதிமுறைப்படி வருகிற 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. எனவே இன்னும் 2 நாட்களே இருப்பதால் உச்சக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது. வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

தமிழக அரசியலில் பலம் பொருந்திய தலைவர்களாக விளங்கிய அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோரின் மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் பொதுத்தேர்தல் என்பதால், இந்த தேர்தல் கூடுதல் கவனத்தை பெற்று இருக்கிறது.

தலைவர்கள்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கம்யூனிஸ்டு கட்சிகளின் மாநில செயலாளர்கள் கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக தலைவர்கள் மட்டுமல்லாது, பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உள்ளிட்ட தேசிய கட்சிகளின் தலைவர்களும் தமிழகத்தை முற்றுகையிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

ராகுல் காந்தி நேற்றுமுன்தினம் கிருஷ்ணகிரி, சேலம், தேனி, மதுரை திருப்பரங்குன்றம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி நேற்று ராமநாதபுரம், தேனி ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொண்டார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று திருச்சி, நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிகளில் பிரசாரம் செய்தார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தர்மபுரியில் வாக்கு சேகரித்தார்.

அ.ம.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கள்ளக்குறிச்சி, ஆரணி, திருவண்ணாமலை தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கிருஷ்ணகிரியிலும், நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சென்னையிலும் பிரசாரம் மேற்கொண்டனர்.

18 தொகுதிகளில் கூடுதல் கவனம்

18 சட்டசபை தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல் தமிழக அரசின் வாழ்நாளை தீர்மானிக்கும் என்பதால் அந்த தொகுதிகளில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கூடுதல் கவனம் செலுத்துகின்றன.

16-ந் தேதி மாலை பிரசாரம் ஓய்ந்து விடும் என்பதால், அதன்பிறகு பிரசாரம், பொதுக் கூட்டம், பேரணி நடத்த அனுமதி கிடையாது. பேஸ்புக், டுவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் பிரசாரமும் செய்ய முடியாது. அதையும் மீறி யாராவது தேர்தல் பிரசாரம் மேற்கொண்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதுதொடர்பான புகார்கள் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

பறக்கும் படை அதிகாரிகள்

தேர்தல் பிரசாரம் ஓய்ந்தவுடன், தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும். சம்பந்தம் இல்லாத நபர்கள் யாராவது தங்கி இருக்கிறார்களா என்பதை அறிய ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள், விடுதிகள், விருந்தினர் இல்லங்கள் ஆகியவற்றில் சோதனை நடத்தப்படும்.

தேர்தல் பிரசாரம் முடிவடையும் 16-ந் தேதி மாலை 5 மணியில் இருந்து கருத்துக் கணிப்புகளை வெளியிட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் வழங்குவதை தடுக்க மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். தேர்தல் நாள் நெருங்கி வருவதால் அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

Next Story