நாமக்கல், சேந்தமங்கலத்தில் 5 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக அதிரடி சோதனை


நாமக்கல், சேந்தமங்கலத்தில் 5 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக அதிரடி சோதனை
x
தினத்தந்தி 14 April 2019 2:10 AM IST (Updated: 14 April 2019 2:10 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல், சேந்தமங்கலத்தில் நேற்று 2-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

நாமக்கல், 

நாமக்கல், சேந்தமங்கலத்தில் நேற்று 2-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

அரசு ஒப்பந்ததாரர்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள நடுகோம்பையை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 67). இவர் தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் ஒப்பந்ததாரராக உள்ளார். கட்டுமான நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இவரது கட்டுமான நிறுவனத்தில் கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் காலை முதல் அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் கோவையை சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு வரை நடைபெற்ற இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் அதிகாரிகளிடம் சிக்கியதாக கூறப்படுகிறது. எனவே நேற்று 2-வது நாளாக அதிகாரிகள் சோதனையை தொடர்ந்தனர்.

5 இடங்களில் சோதனை

இதேபோல் நாமக்கல்-மோகனூர் சாலை மகாத்மா காந்தி சாலையில் உள்ள பெரியசாமியின் மகன் அசோக்குமார் வீட்டிலும் நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இவரும் கட்டுமான நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியசாமியின் நெருங்கிய உறவினரான சண்முகம் என்பவரின் வீடு, மற்றொரு உறவினர் செல்வகுமாரின் கட்டுமான வரைபட தயாரிப்பு நிறுவனம் ஆகிய இடங்களிலும் பல்வேறு குழுக்களாக பிரிந்து வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனை முடிந்த பிறகே எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது? என்பது தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் நாமக்கல் மற்றும் சேந்தமங்கலத்தில் 5 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story