சென்னையில் 14 போலீஸ் அதிகாரிகளை இடம் மாற்ற வேண்டும் தேர்தல் டி.ஜி.பி.யிடம் தி.மு.க. மனு
சென்னையில் 14 போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தேர்தல் டி.ஜி.பி.யிடம் தி.மு.க. மனு அளித்துள்ளது.
சென்னை,
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., தமிழக தேர்தல் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லாவுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள பல போலீஸ் அதிகாரிகள் நேர்மையாக செயல்படவில்லை. ஆளும்கட்சியினரின் அறிவுறுத்தலுக்கு தகுந்தாற்போல் சென்னையில் 14 போலீஸ் அதிகாரிகள் செயல்படுகின்றனர்.
வாக்காளர்களுக்கு பணம்
ஆளும்கட்சியினரின் தேர்தல் விதிமுறைகளை தி.மு.க.வும், மற்ற எதிர்க்கட்சிகளும் புகாராக அளித்த போதும், மேற்கண்ட போலீஸ் அதிகாரிகள் அந்த புகாரை நிராகரித்ததோடு மட்டுமல்லாமல் தேர்தல் விதிமீறல்களை தொடரும் வகையில் ஆளும் கட்சியினருக்கு பாதுகாப்பும் அளித்து வருகின்றனர்.
எனவே, இந்த போலீஸ் அதிகாரிகளை தேர்தல் பணியில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். சென்னை நகரில் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற இவர்களை தற்போதைய பணியிடத்தில் இருந்து மாற்றம் செய்து விட்டு அந்த பணியிடங்களுக்கு புதிய போலீஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
சென்னை மாநகராட்சியை பொறுத்தமட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக சட்டவிரோதமாக வாகனங்களில் பணம் எடுத்து செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்கவும், தடுக்கவும் உதவி நிர்வாக என்ஜினீயர்கள் பறக்கும் படை அதிகாரிகளாக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், உதவி நிர்வாக என்ஜினீயர்களின் வாகனங்களிலேயே ஓட்டுக்காக பணம் எடுத்து செல்லப்படுவதாக அறிகிறோம்.
பொய் வழக்குகள்
ஆளும்கட்சியினர் சட்டவிரோதமாக ஓட்டுக்கு பணம் கொடுக்க உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி அறிவுறுத்தலின் பேரில் அதிகாரிகள் முழு ஒத்துழைப்பை அளித்து வருகின்றனர். எனவே, உதவி நிர்வாக என்ஜினீயர்களை பறக்கும் படையில் இருந்து விடுவிக்க வேண்டும்.
கோவை மாவட்டம் பேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆளும்கட்சியான அ.தி.மு.க. வுக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார். இவர், தேர்தல் விதிமீறல்களில் ஈடுபடும் ஆளும் கட்சியினர் மீது புகார் கொடுக்கும் தி.மு.க.வினரை துன்புறுத்தி அவர்கள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்கிறார். தி.மு.க.வினர் கொடுக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மிரட்டுகிறார்.
எனவே, தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய மேற்கண்ட போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story