‘நாம் தமிழர் கட்சி சின்னம் திட்டமிட்டு மறைப்பு’ சீமான் குற்றச்சாட்டு


‘நாம் தமிழர் கட்சி சின்னம் திட்டமிட்டு மறைப்பு’ சீமான் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 April 2019 2:18 AM IST (Updated: 14 April 2019 2:18 AM IST)
t-max-icont-min-icon

நாம் தமிழர் கட்சியின் சின்னம் திட்டமிட்டு மறைக்கப்பட்டிருப்பதாக சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் வடசென்னை நாடாளுமன்ற வேட்பாளர் பி.காளியம்மாளை ஆதரித்து பழைய வண்ணாரப்பேட்டை பொதுக்கூட்டத்திலும், பி.காளியம்மாள் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் செ.மெர்லின் சுகந்தியை ஆதரித்து பெரம்பூர் பொதுக்கூட்டத்திலும், மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து புரசைவாக்கம் தானா தெருவில் நடந்த பொதுக்கூட்டத்திலும் நேற்று சீமான் பேசினார்.

பழைய வண்ணாரப்பேட்டை அஜீஸ் முகமது கவுஸ் தெருவில் ‘விவசாயி’ சின்னத்துக்கு வாக்கு கேட்டு, சீமான் பேசியதாவது:-

ஊழலுக்கான விதை ஓட்டுக்கு பணம் கொடுப்பதில் இருந்துதான் உருவாகிறது. நாங்கள் ஆட்சி மாற்றத்திற்காக வந்தவர்கள் அல்ல. நமது அடிப்படையையே மாற்றுவதற்காக வந்திருக்கிறோம். மழை நீரை சேமிக்கவேண்டும் என்று ஆளுகிறவர்கள் சொல்கிறார்கள். நாங்கள் வீட்டில் மழை நீரை சேமிக்கிறோம். அவர்கள் நாட்டில் மழை நீரை சேமித்திருக்கிறார்களா? உலகிலேயே அதிகமாக நீரை உறிஞ்சும் நாடு இந்தியா. இந்தியாவிலேயே அதிகம் நீரை உறிஞ்சும் மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் 24 மாவட்டங்கள் வறட்சி என்று அரசு அறிவிக்கிறது. நீரற்ற மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது.

குத்தகை விட்டுவிடலாம்

கல்வி, மின்சாரம், குடிநீர், சாலை பராமரிப்பு, மருத்துவத்துக்கு பணம் வாங்குகிறார்கள். இது தேசமா? நாடா? கஜா புயலில் தமிழகம் செத்துப்போனது. அப்போது வராதவர்கள், இப்போது ஓட்டுகேட்டு வெட்கம் இல்லாமல் வருகிறார்கள்.

நாட்டின் முதல் குடிமகனுக்கு என்ன மருத்துவம் கிடைக்கிறதோ? அதே மருத்துவம் கடைக்கோடி மகனுக்கும் கிடைக்க வேண்டும். அதான் மக்களாட்சி. அரசை நடத்துகிறவர்கள் அரசு மருத்துவமனை, பள்ளி, போக்குவரத்தை பயன்படுத்துவது இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு அதில் நம்பிக்கை இல்லை. இவர்கள் எதற்காக தேர்தல் நடத்துகிறார்கள். பேசாமல் குத்தகைக்கு விட்டுவிட வேண்டியது தானே? அதானி, அம்பானி ஆளாளுக்கு 5 ஆண்டுகள் ஆட்சி செய்யட்டும். எல்லாவற்றிலும் தனியார் நிர்வாகம் வந்துவிட்டது.

திட்டமிட்டு மறைப்பு

பா.ஜ.க.வை ஒழிக்க வேண்டும். அதற்கு மாற்று காங்கிரஸ் அல்ல. நீங்கள் பாராளுமன்ற உறுப்பினரை தான் தேர்வு செய்கிறீர்கள். பிரதமரை தேர்வு செய்யவில்லை. 130 கோடி மக்களை ஆள்வதற்கு மோடி, ராகுல்காந்தியை தவிர வேறு யாரும் இல்லையா? நாங்கள் ஆண்டால் நாடு நாசமாக போய்விடுமா? ஒருமுறை வாய்ப்பு கொடுத்து பாருங்கள். நாடுகளிலேயே தலைசிறைந்த நாடாக மாற்றி காட்டுவோம்.

கூட்டாட்சியும், மாநிலத்தில் தன்னாட்சியும் வரவேண்டும். எங்களுடைய சின்னம் (கரும்பு விவசாயி) இந்த தேர்தலில் திட்டமிட்டு மறைக்கப்பட்டு இருக்கிறது. எந்த சின்னம் தெரியலையோ? அது தான் விவசாயி சின்னம். பசிக்கு 3 வேளை உணவு உண்ணும் மக்கள், நன்றி உணர்வோடு விவசாயியின் சின்னத்தில் வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

பேச்சை நிறுத்திய சீமான்

பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தின் அருகே உள்ள மசூதிகளில் அடுத்தடுத்து தொழுகை நடந்தது. அந்த சமயத்தில் சீமான் தனது பேச்சை இடையில் நிறுத்திவிட்டு அமைதி காத்தப்படி மேடையில் நின்றார். தொழுகை முடிந்ததும் வழக்கம்போல தன்னுடைய ஆவேச பேச்சை சீமான் தொடங்கினார்.

Next Story