ஆளும்கட்சி கோடி கோடியாக பணம் பதுக்கல்: எதிர்க்கட்சிகளை குறிவைத்து தேர்தல் ஆணையம் சோதனை நடத்துகிறது கே.எஸ்.அழகிரி பரபரப்பு குற்றச்சாட்டு
ஆளுங்கட்சியினர் கோடி, கோடியாக பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கி வைத்திருப்பதாகவும், ஆனால் தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளை குறிவைத்து சோதனை நடத்துவதாகவும் கே.எஸ்.அழகிரி பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்கு, வருமான வரித்துறை முதன்மை கமிஷனர் எழுதிய கடிதத்தில் 2016-ம் ஆண்டு தேர்தலில் வாக்காளர்களுக்கு ரூ.650 கோடி பணம் கொடுத்து அ.தி.மு.க. ஆட்சியை தக்கவைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமைச்சர்களாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், நத்தம் விஸ்வநாதன் மூலம் அந்த பணம் அளிக் கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் முதல் கட்ட விசாரணையை மட்டுமே நடத்திவிட்டு, கிடப்பில் போட்டுவிட்டன.
ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்ததை மற்ற கட்சிகள் ஏற்கவில்லை என்று நரேந்திர மோடி கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. நேரு காலத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்வதில்லை. எம்.பி.க்கள் தான் பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள். ஒரு குடும்பம் நாட்டை ஆளுகிறது என்று மோடி சொல்கிறார். அந்த ஒரு குடும்பம் நாட்டுக்காக தியாகம் செய்திருக்கிறது. அவர்களை விட தியாகம் செய்தவர்கள் யாராவது இருக்க முடியுமா?
ஆளுங்கட்சியின் பணம்
மோடி ஆட்சியில் இந்தியாவை விடவும், எடப்பாடி பழனிசாமி மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார். தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ள மொத்த பணத்தில் 90 சதவீதம் பொதுமக்களுக்கு உரியது. ஆளுங்கட்சியின் பணம் கோடி, கோடியாக தொகுதிகளில் வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அதனை இன்னும் பிடிக்கவில்லை. தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளை மட்டுமே குறிவைத்து சோதனை நடத்துகிறது. தேர்தல் ஆணையம் பரிதாபமான நிலையில் மோடிக்கு கைக்கட்டி நிற்கிறது.
இதனால் தேர்தல் ஆணையம் மீண்டும் ஒரு முறை தோல்வி அடைந்துவிடுமோ என்ற அச்சம் எழுகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 4 தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களை நாங்கள் ஆதரிக்கிறோம். காங்கிரஸ் கட்சியின் மேடைகளில் தனிநபரை விமர்சனம் செய்வது இல்லை. மக்கள் எங்கள் பக்கம் இருப்பதால் இந்த தேர்தலில் மகத்தான வெற்றி நிச்சயம் பெறுவோம். ராகுல்காந்தி பேசியதை தமிழில் மொழிபெயர்ப்பு செய்ததில் எந்த தவறும் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
மரியாதை
முன்னதாக டாக்டர் அம்பேத்கரின் 129-வது பிறந்தநாளையொட்டி சத்தியமூர்த்தி பவனில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவருடைய உருவப்படத்துக்கு கே.எஸ்.அழகிரி தலைமையில் செய்தித்தொடர்பாளர் கோபண்ணா, தென் சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், எஸ்.சி. பிரிவு தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா, பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.அகமது அலி உள்பட நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Related Tags :
Next Story