டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசார வேன் மீது கல்வீச்சு அ.தி.மு.க., பா.ம.க.வினர் சாலை மறியல்


டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசார வேன் மீது கல்வீச்சு அ.தி.மு.க., பா.ம.க.வினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 April 2019 2:24 AM IST (Updated: 15 April 2019 2:24 AM IST)
t-max-icont-min-icon

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பிரசாரத்திற்கு சென்ற வேட்பாளர்கள் டாக்டர் அன்புமணி ராமதாஸ், கோவிந்தசாமி ஆகியோர் வேன் மீது மர்ம ஆசாமிகள் கல்வீசினர்.

பொம்மிடி, 

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பிரசாரத்திற்கு சென்ற வேட்பாளர்கள் டாக்டர் அன்புமணி ராமதாஸ், கோவிந்தசாமி ஆகியோர் வேன் மீது மர்ம ஆசாமிகள் கல்வீசினர். இதனால் அ.தி.மு.க., பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பிரசார வேன் மீது கல்வீச்சு

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் கோவிந்தசாமி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு மெணசி பகுதியில் பிரசாரத்திற்கு சென்றனர். அப்போது மர்ம ஆசாமிகள் யாரோ வேட்பாளர்கள் சென்ற பிரசார வேன் மீது கல்வீசினர். இதனால் வேட்பாளர்கள் அன்புமணி ராமதாஸ், கோவிந்தசாமி ஆகியோர் மெணசி பகுதியில் பிரசாரத்தை ரத்து செய்து விட்டு புறப்பட்டு சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அ.தி.மு.க.வினர், பா.ம.க. வினர் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மெணசியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போலீசார் பாதுகாப்பு

அப்போது பிரசார வேன் மீது கல்வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். மர்ம ஆசாமிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். வேட்பாளர்கள் சென்ற பிரசார வேன் மீது கல்வீசிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் இருக்க அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story