‘தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்’ பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
தமிழின படுகொலைக்கு காரணமாக இருந்த தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து நேற்று விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், திறந்த வேனில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் அமைந்த ஒரு ராசியான கூட்டணிபோல் தற்போது இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் ராசியான கூட்டணி அமைந்துள்ளது. இது மெகா கூட்டணி. மோடி மீண்டும் வெற்றி பெற்று பிரதமராக ஆட்சி அமைக்கப் போவது உறுதி.
ஊழல் கூட்டணி
நம்மை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மக்களால் புறக்கணிக்கப்பட்ட கூட்டணி. தமிழின படுகொலைக்கு காரணமாக இருந்த தி.மு.க., காங்கிரசுக்கு ஒட்டுமொத்த மக்களும் ஓட்டுப்போட மாட்டார்கள். நம் தொப்புள்கொடி உறவுகளின் இனப்படுகொலைக்கு காரணமாக இருந்தது தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி என்பதை தமிழக மக்கள் மறக்கவில்லை. இந்த தேர்தலில் அவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்.
தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி என்றாலே ஊழல் கூட்டணி. 2ஜி ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் இப்படி அனைத்திலும் ஊழல் செய்த கூட்டணி. விஜயகாந்தை தொட்டவர்களின் கதி என்னவென்று துரைமுருகனை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
செஞ்சி
முன்னதாக பிரேமலதா விஜயகாந்த் செஞ்சி நான்குமுனை சந்திப்பில் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் செஞ்சி ஏழுமலையை ஆதரித்து திறந்த வேனில் நின்றபடி பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், பெண்கள் நன்றாக இருக்க வேண்டும். பெண்கள் நல்லா இருந்தால் இந்த வீடு நல்லா இருக்கும். மேலும் ஆரணி தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற செஞ்சி ஏழுமலைக்கு இரட்டை சிலை சின்னத்தில் வாக்களித்து அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.
Related Tags :
Next Story