மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது 18-ந் தேதி ஓட்டுப்பதிவு + "||" + Leaders across Tamil Nadu Final vote collection Propagation this evening ends 18 on voting

தமிழகம் முழுவதும் தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது 18-ந் தேதி ஓட்டுப்பதிவு

தமிழகம் முழுவதும் தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது 18-ந் தேதி ஓட்டுப்பதிவு
தமிழகம் முழுவதும் தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது. 18-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.
சென்னை,

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.
முதல் கட்டமாக 91 நாடாளுமன்ற தொகுதிகளில் கடந்த 11-ந் தேதி தேர்தல் நடந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்தல் 18-ந் தேதி (நாளை மறுநாள்) நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நடக்கிறது.


இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளும் போட்டி களத்தில் பிரகாசிக்கின்றன.

நாடாளுமன்ற தேர்தலில் 845 வேட்பாளர்களும் (ஆண்கள் 781, பெண்கள் 63, திருநங்கை 1), சட்டமன்ற இடைத்தேர்தலில் 269 வேட்பாளர்களும் (ஆண்கள் 242, பெண்கள் 27) போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் மொத்தம் 5.99 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த ஒரு மாதமாக ஒவ்வொரு கட்சியின் தலைவரும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களுக்காக சூறாவளியாக சுழன்று பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் வாக்குறுதிகளையும் வெளியிட்டுள்ளனர்.

அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, பியூஸ் கோயல், ஸ்மிரிதி இரானி, அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கட்சி ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா மற்றும் கட்சி பிரமுகர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.

தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் பிரசாரம் செய்கின்றனர்.

டி.டி.வி.தினகரன், கமல் ஹாசன், சீமான் உள்பட பலர் அனல் பறக்க பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். வெயில் கடுமையாக இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல் அரசியல் கட்சியினர் வெற்றிக்காக வீதி, வீதியாகவும், வீடு, வீடாகவும் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் இன்று இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்கள்.

தேர்தல் விதியின்படி, வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக தேர்தல் பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும். 18-ந் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. எனவே 48 மணி நேரத்துக்கு முன்பு அதாவது, 16-ந் தேதி (இன்று) மாலை 6 மணியுடன் அரசியல் கட்சிகளின் பிரசாரம் ஓய்கிறது.

இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்தில் இருந்து ( 18-ந் தேதி மாலை 6 மணி) 48 மணி நேரத்துக்கு முன்பு (16-ந் தேதி மாலை 6 மணிக்குள்) அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும். கடைசி 2 நாட்களுக்கு வீட்டுக்கு வீடு சென்று வாக்காளர்களை சந்தித்து பிரசாரம் செய்யக்கூடாது. அந்த 2 நாட்களும் வாக்காளர்கள் சுதந்திரமாக சிந்தித்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள்.

மீடியா கண்காணிப்பு மற்றும் விளம்பரம் சான்றளிக்கும் குழு (எம்.சி.எம்.சி. குழு), டி.வி.களில் செய்யப்படும் விளம்பரங்களை கண்காணித்து வருகிறது. அதில் ஆட்சேபகரமான வாசகங்கள் வருவதாக கட்சிகள் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டன.

அந்த வாசகங்களை அழித்துவிடும்படி உத்தரவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த வாசகங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக பெரிய அளவில் புகார்கள் வரவில்லை.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 4 தொகுதிகளிலும்கூட 16-ந் தேதி மாலை 6 மணியில் இருந்து 19-ந் தேதி வரை பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது. அதன் பின்னர் தொடர்ந்து பிரசாரம் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாடாளுமன்ற பொதுத்தேர்தல்கள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 18-ந் தேதி (நாளை மறுநாள்) அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை (மதுரை நாடாளுமன்ற தொகுதி நீங்கலாக) நடைபெறும்.

மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். 16-ந் தேதி அன்று (இன்று) மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவுகள் முடிவடையும் வரையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 126-ன் கீழ்வரும் விதிமுறைகள் செயலில் இருக்கும்.

அதன்படி, தேர்தல் தொடர்பான யாதொரு பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.

யாதொரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எப்.எம். ரேடியோ, வாட்ஸ்-அப், முகநூல், டுவிட்டர் போன்ற அல்லது இது போன்ற சாதனம் வாயிலாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக்கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உள்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.

பொது மக்களில் எந்தவொரு நபரையும் ஈர்க்கிற வகையில், யாதொரு இசை நிகழ்ச்சி அல்லது யாதொரு திரையரங்க செயல்பாடு அல்லது ஏதேனும் பிற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் அங்குள்ள பொதுமக்களிடம் யாதொரு தேர்தல் விவகாரத்தையும் யாதொரு நபரும் பிரசாரம் செய்யக்கூடாது.

இந்த விதிமுறைகள் எவ்விதத்தில் மீறப்பட்டாலும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126 (2)-ன்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

தொகுதிக்கு வெளியே இருந்து அழைத்துவரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் 16-ந் தேதி (இன்று) மாலை 6 மணிக்கு மேல் அந்த தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

கல்யாணமண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பதை கண்டறியப்படும்.

வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உள்பட வாகன அனுமதிகள், 16-ந் தேதி மாலை 6 மணி முதல் செயல்திறனற்றதாகிவிடும்.

வாக்குப்பதிவு நாளன்று ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருந்து தனி அனுமதி பெற உரிமையுடையவராவார். அதன்படி, அவரது பயன்பாட்டிற்கான ஒரு வாகனம், தேர்தல் முகவரின் பயன்பாட்டிற்கான ஒரு வாகனம் மற்றும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கான அவரது பணியாளர்கள் அல்லது கட்சி பணியாளர்களின் பயன்பாட்டிற்கான மற்றொரு வாகனம் ஆகியவற்றுக்கு அனுமதி பெறலாம்.

வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச்சாவடிகளிலிருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது. இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 133-ம் பிரிவின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய முறைகேடு.

இரண்டு நபர்களை மட்டுமே கொண்ட, வேட்பாளர்களின் அரசியல் கட்சிகளின் தற்காலிக பிரசார அலுவலகம் வாக்குச்சாவடியிலிருந்து 200 மீட்டர் தொலைவில் அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக்கூடாது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 126 (1) (பி) பிரிவின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடைகின்ற 48 மணி நேர கால அளவில் (இன்று மாலை 6 மணி முதல்) ஏதேனும் கருத்துக்கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உள்பட எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும், எந்தவித மின்னணு ஊடகத்தில் காட்சிப்படுத்துவது தடை விதிக்கப்படுகிறது.

11-ந் தேதி காலை 7 மணி முதல் மே 19-ந் தேதி அன்று மாலை 6.30 மணி வரையில் வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம் முழுவதும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் 12 பேர் மாற்றம்
தமிழ்நாட்டில் 12 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பை அரசு நேற்று அறிவித்தது.
2. தமிழகம் முழுவதும் 1½ லட்சம் விநாயகர் சிலைகள் பிரதி‌‌ஷ்டை இந்து முன்னணி மாநில செயலாளர் பேட்டி
தமிழகம் முழுவதும் 1½ லட்சம் விநாயகர் சிலைகள் பிரதி‌‌ஷ்டை செய்யப்பட உள்ளது என்று இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் குமார் ஊட்டியில் பேட்டி அளித்தார்.
3. தமிழகம் முழுவதும் 18-ந்தேதி புறநோயாளிகள் புறக்கணிப்பு போராட்டம் அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு
தமிழகம் முழுவதும் புறநோயாளிகள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.
4. தமிழகம் முழுவதும் 119 மையங்களில் நடந்தது முதுகலை கணினி ஆசிரியர் தேர்வு 814 இடங்களுக்கு 30 ஆயிரத்து 833 பேர் போட்டி
முதுகலை கணினி ஆசிரியர் தேர்வு தமிழகம் முழுவதும் 119 மையங்களில் நேற்று நடந்தது. 814 இடங்களுக்கு 30 ஆயிரத்து 833 பேர் போட்டியிடுகிறார்கள்.
5. தமிழகம் முழுவதும் 28-ந்தேதி கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு
தமிழகம் முழுவதும் 28-ந்தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.