மற்ற கட்சி வேட்பாளர்கள் முதலாளிகள் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் ஏழைகள் சீமான் பேச்சு


மற்ற கட்சி வேட்பாளர்கள் முதலாளிகள் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் ஏழைகள் சீமான் பேச்சு
x
தினத்தந்தி 16 April 2019 10:00 PM GMT (Updated: 2019-04-17T03:30:59+05:30)

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் ஏழைகள். மற்ற கட்சி வேட்பாளர்கள் முதலாளிகள் என்று சீமான் கூறினார்.

சென்னை,

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஏ.ஜே.ஷெரீன், மத்தியசென்னை வேட்பாளர் கார்த்திக்கேயன், வடசென்னை வேட்பாளர் காளியம்மாள், ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மகேந்திரன் ஆகியோரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை தியாகராயர் பஸ்நிலையம் அருகே நேற்று மாலை இறுதிக்கட்ட பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசியதாவது:-

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மட்டும் தான் ஏழை வேட்பாளர்கள். மற்ற கட்சி வேட்பாளர்கள் எல்லாம் முதலாளிகள். எடப்பாடி பழனிசாமி போய், மு.க.ஸ்டாலின் வந்தால் மட்டும் என்ன மாற்றம் நேரிட போகிறது?. இப்போது இவர்கள் ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் கொடுக்கிறார்கள். அடுத்த தேர்தலில் அவர்கள் ரூ.10 ஆயிரம் கொடுப்பார்கள். ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம், ரூ.3 ஆயிரம் கொடுக்கிற ஆட்கள் நாங்கள் இல்லை. போராடி பெற்ற ஜனநாயகத்தை கேடுகெட்ட பணநாயகமாக இன்றைக்கு மாற்றி விட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாம் தமிழர் கட்சி வளர்ந்து விடக்கூடாது என்பதற்காக எங்களுடைய ‘விவசாயி’ சின்னம் திட்டமிட்டு சின்னதாகவும், மங்களாகவும் வாக்குப்பதிவு எந்திரத்தில் மறைக்கப்பட்டுள்ளது.

வேலூரில் துரைமுருகன் வீட்டில் தான் பணம் இருக்கிறதா? அங்கு வேறு யாரிடமும் பணம் இல்லையா?. பணப்பட்டுவாடா செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?. தேர்தல் ஆணையம் நாடக கம்பெனி போல் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story