விழிப்புடன் இருங்கள்; வெற்றி நமக்கே உரித்தாகும் தொண்டர்களுக்கு, ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி கடிதம்


விழிப்புடன் இருங்கள்; வெற்றி நமக்கே உரித்தாகும் தொண்டர்களுக்கு, ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி கடிதம்
x
தினத்தந்தி 17 April 2019 4:45 AM IST (Updated: 17 April 2019 4:03 AM IST)
t-max-icont-min-icon

வெற்றி அனைத்தும் நமக்கு உரித்தாகும் என்றும் உச்சக்கட்ட விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளனர்.

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தேர்தல் அறிவித்து விட்ட அந்த வினாடியில் தொடங்கி வெற்றிச் சான்றிதழை பெற்று அ.தி.மு.க. தலைமையகத்தில் கொண்டு வந்து காணிக்கையாக்குவது வரை அயராது சுழன்று உழைக்கும் அர்ப்பணிப்பு உள்ள தொண்டர்களால் நிறைந்து வழியும் ஒரே நிகரற்ற இயக்கம் அ.தி.மு.க. தான். இன்றைக்கு நம் தாயில்லா காலத்தில் நாங்கள் இருவரும் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று ஜெயலலிதா வழியிலான நல்லாட்சி தொடர்வதற்கும், தேசத்தின் பிரதமராக பாரத தேசத்தின் கறைபடாத காவலரான நரேந்திர மோடி நல்லாட்சி தொடர்வதற்கும் வாய்ப்பு தாருங்கள் என்று மக்களையெல்லாம் சந்தித்து தேசத்திற்கான நன்மையை எடுத்துரைத்திருக்கிறோம்.

தமிழ்நாட்டை மீட்டு மின்மிகை மாநிலமாக மாற்றியதையும், மீத்தேனுக்கு முற்றுப்புள்ளி வைத்து, நெடுவாசல் மக்களுக்கு நிம்மதி தந்ததையும், ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டு வாடிவாசல் திறந்துவிட்ட வரலாறு படைத்ததையும், கால்வாயை அடைக்கும், கால்நடைகளை அழிக்கும், மண்ணை மலடாக்கும், மக்களுக்கு புற்றுநோயை பரிசளிக்கும் பிளாஸ்டிக் அரக்கனை ஒழித்து சுற்றுச்சூழல் காத்ததையும், தமிழர் தம் பண்டிகையான பொங்கல் திருநாளுக்கு கரும்போடு வெல்லமும், அரிசியும், வேட்டியும், சேலையும் தந்து, விலையில்லா அரிசி, தாலிக்கு தங்கம், திருமண உதவித் தொகை, ஆதரவற்ற விதவைகள் மற்றும் முதியோர் உதவித் தொகை, படித்து பணிக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களையும் கருணையே தவழ நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

நரேந்திரமோடி நல்லாட்சிக்கும், தமிழக மக்கள் பேராதரவை வழங்கிட 18-ல் (நாளை) அ.தி.மு.க. அமைத்திருக்கும் மெகா கூட்டணிக்கே வாக்களிக்க, ஒட்டுமொத்தத் தமிழகம் உறுதி மேற்கொண்டிருக்கிறது.

அதே வேளையில் சூழ்ச்சியையே பிழைப்பாகக் கொண்டு தகிடுதத்தங்களையே பொழுதெல்லாம் செய்து, நரித்தனங்களையே அட்டவணையாக்கி, பொய்யும், புரட்டுமே பொழுதாகக்கொண்டு மக்களை திசை திருப்ப வெறிக்கொண்டு அலையும் எதிர்க்கட்சிகளை நாம் விழிப்போடு இருந்து தடுத்திட வேண்டும்.

தேர்தல் ஜனநாயகத்தில் அ.தி.மு.க. தொண்டர்களை மிஞ்சுவதற்கு இந்த காந்தி தேசத்தில் இணையில்லை என்பதனை மெய்பிக்கும் விதமாக, நாற்பத்தாறு வயது கட்சி, முப்பது ஆண்டுகள் தமிழகத்தில் முடிசூடி வழிநடத்துகிறது என்றால் அ.தி.மு.க. தொண்டர்களின் தேர்தல் பணிகள் எத்தகையது என்பதை உணர்த்தும் விதமாக, கூட்டணி இயக்கங்களின் தொண்டர்களோடு ஒற்றுமை அரண் அமைத்து ஒட்டுமொத்த வெற்றியை கொய்வதற்கு ஒன்றரை கோடி சிப்பாய் படையும் சத்திய பிரமாணம் மேற்கொள்ள வேண்டும்.

பத்து மாதம் சுமக்கும் தாய்க்கு பிரசவ வழி தொடங்கி பிள்ளை பேறு வரை திட்டங்களை வாரி வழங்கியுள்ளோம். அந்த நிமிடங்கள் எந்த அளவுக்கு உன்னதமானதோ, உயிர் முக்கியமானதோ, அதற்கு சமமானது வாக்குப்பதிவு நடக்கும் இடங்களில் நம் முகவர்கள் வாக்குப்பதிவை கண்காணிப்பதும், வாக்குச்சாவடிக்கு வரும் பொதுமக்களிடம் பண்போடும், பாசத்தோடும் நம்முடைய வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக் கோருவதும் ஆகும். மேலும், அ.தி.மு.க. மற்றும் கூட்டணிக்கட்சிகளின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி முகவர்களும் வாக்குகளை எண்ணி முடிவு அறிவிக்கும் வரை அங்கேயே மிகுந்த விழிப்புணர்வோடு இருந்து கடமை ஆற்றிட வேண்டும்.

நாற்பது தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தல் வெற்றிகள் அனைத்துமே நமக்கென ஆகும் என்பது சத்தியம். பானை பொங்குகிற நேரம். நம் தொண்டர்கள் செய்யும் கடமையில் உச்சக்கட்ட விழிப்புணர்வைக்கொண்டு செயலாற்ற வேண்டும். தமிழகமே தனக்கு வேலி, தமிழ் இனமே தனக்கு உறவு எனும் தவத்தால் வாழ்ந்திட்ட, நம்மை போன்ற ஏழை, எளிய சாமானியர்கள் லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பச்சை மையில் கையெழுத்திடும் பாக்கியத்தைத் தந்தார். அந்த பாசத்தாய் நம்மிடம் வைத்த ஒரே கோரிக்கை, எனக்குப் பின்னாளும் நூறாண்டுகள் அ.தி.மு.க.வை ஆள வேண்டும் என்பது மட்டுமே. அவரின் உயிர் உருகிய அந்த வேண்டுகோளை, உயிர் தந்தும் காத்திடுவோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story